siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 18 டிசம்பர், 2012

தோள்பட்டை வலி, மூட்டு வலி குறித்த பதில்கள்!

   

தோள்பட்டை வலி, மூட்டு வலி குறித்த சந்தேகங்களுக்கு கோவை திருச்சி ரோட்டிலுள்ள ஆர்த்தோ ஒன் எலும்பு மற்றும் மூட்டு சிகிச்சை மைய
நிர்வாக இயக்குநரும், ஆர்த்ரோஸ் கோபிக் மற்றும் விளையாட்டு காயங்களுக்கான சிறப்பு மருத்துவ நிபுணருமான டாக்டர் வி.டேவிட்ராஜன் அளித்த
பதில்கள் வருமாறு:


எனக்கு வயது 45. 2வது மாடியில் குடியிருக்கிறேன். தரை தளத்தில் உள்ள குடிநீர் குழாயில் இருந்து குடும்பத்தின் தேவைக்கு 25 குடம் வரை தண்ணீர் எடுக்க வேண்டும். 2வது மாடிக்கு குடத்தை தூக்கி செல்வதால் கை, கால் மூட்டு பாதிக்குமா?

தொடர்ச்சியாக குடத்தில் தண்ணீர் எடுத்து செல்லக்கூடாது. சிறிது நேரம் இடைவெளி விட்டு எடுத்து செல்லலாம். பெரிய குடத்தை பயன்படுத்த
கூடாது. சிறிய குடத்துடன் ஏறி இறங்கும் போது உடலுக்கு பயிற்சி தான். ஆனால் இடைவெளி விட்டு கொண்டு சென்றால் பாதிப்பு குறையும்.

வீட்டில் மிக்சி, கிரைண்டர், வாஷிங் மெஷின் உள்ளிட்ட நவீன உபகரணங்கள் உள்ளன. கடினமான வேலை எதுவும் நான் செய்வதில்லை. இருப்பினும் தோள்பட்டை வலிக்கிறது. சற்று கனமான பொருளை தூக்கிவிட்டால் கூட, வலி தாங்க முடிவதில்லை. நாற்பது வயதை நெருங்கும் எனக்கு பயமாக இருக்கிறது.
இதற்கு உடற்பயிற்சி முக்கியம். தோள்பட்டையில் வலி இருந்தால் உடனடியாக அருகிலுள்ள மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

இட்லி, தோசை மாவு விற்கிறேன். தூங்கும்நேரம் தவிர எப்போதும் வேலைதான். தோள்பட்டை வலியால் அவதிப்படுகிறேன். ஒரு மருத்துவமனைக்கு சென்றபோது டெஸ்ட் செய்து பார்த்து, ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள். வலி நிவாரணி மாத்திரை சாப்பிடுவது தற்காலிக தீர்வாக
உள்ளது. 50 வயதுக்கு மேல் ஆகிவிட்டதால், ஆபரேஷன் செய்தால் ஆபத்து என்று சிலர் பயமுறுத்துகிறார்களே...


பயப்பட தேவையில்லை. நவீன நுண்துளை சிகிச்சை உள்ளது. இதன் மூலம் சிகிச்சை செய்வதால் எந்தவிதமான ஆபத்தும் இல்லை.

வயது 65 ஆகிறது. தோள்பட்டை வலிக்கும் போது கழுத்தும் வலிக்கிறது. இரண்டு வலிகளும் ஒன்றுதானா? வேறு என்றால், மருத்துவம் தனி தனியாக பார்க்க வேண்டுமா?

கழுத்து வலி ஏற்பட்டால் தோள்பட்டை வலியும் வர வாய்ப்பு அதிகம். கழுத்து எலும்பு தேய்மானத்தால் தோள்பட்டை வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதற்கு சிறிய அளவிலான தலையணைகளை பயன்படுத்தலாம். கழுத்து வலிக்கென சிறப்பு உடற்பயிற்சி இருக்கிறது. இந்த வலி தொடர்ந்து
ஏற்பட்டால் தக்க மருத்துவரிடம் ஆலோசனை பெற்று உடற்பயிற்சி செய்வது நல்லது.

என் மகள் 8ம் வகுப்பு படிக்கிறாள். வீட்டில் ஒரே இடத்தில் 2 மணி நேரத்திற்கு குறையாமல் அமர்ந்து கம்ப்யூட்டரில் பேஸ்புக், நெட்டில் செலவிடுகிறாள். இதனால் அவளுக்கு மூட்டு பிரச்னை எதாவது வருமா?

கம்ப்யூட்டரில் பணியாற்றும் போது ஒரே நிலையில் அமர்ந்து இருப்பதால் உடலில் உள்ள எல்லா மூட்டுகளும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
இதை ஆர்எஸ்ஐ என்பார்கள். இதற்கென தனி சிறப்பு உடற்பயிற்சி உள்ளது. இதை மேற்கொண்டால் பாதிப்புகளை தவிர்க்கலாம். உடற்பயிற்சி
மேற்கொள்ளாவிட்டால் நாளடைவில் தனித்தனி மூட்டுகளில் பாதிப்பு ஏற்படும்.

இடுப்பில் சில மாதங்களாக வலி. பஸ்சில் நிற்க முடியாது. வலி உயிர் போகும். வாக்கிங் போனால் சரியாகும் என்றார்கள். அதன்படி வாக்கிங் சென்றபோதும் வலி ஏற்பட்டது. பின்னர் படிப்படியாக வலி குறைந்து இப்போது இடுப்பு வலி இல்லை. இந்த வலி வந்தது ஏன்? போனது ஏன்? வாக்கிங் போனால் இடுப்பு, மூட்டு வலிகள் மாயமாகுமா?

நடைபயிற்சி மேற்கொண்டால் மூட்டுகள் வலிமை பெறும். திறந்த வெளியில் சூரிய ஒளி உடலில் படும்படியாக நடைபயிற்சி செய்ய வேண்டும்.

மூட்டு வலி, வீக்கத்திற்கு மருந்து உள்ளதாக விளம்பரம் செய்கிறார்கள். சிகிச்சைக்கு செல்லாமலேயே இந்த மருந்துகளை வாங்கி குடிக்கலாமா? சரியாகுமா? அல்லது பணமும் காலமும் விரயமாகுமா?

கண்ட மருந்துகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். இதனால் உடலில் பக்க விளைவுகள் ஏற்படும். உரிய மருத்துவரிடம் சிகிச்சை பெற்று அவர்
அளிக்கின்ற மருந்து மாத்திரைகளை சரியான நேரத்தில் உட்கொள்ள வேண்டும்.

எனக்கு வயது 28. கலாசி தொழிலாளி. மூட்டு வலி சில நேரங்களில் ஏற்படுகிறது. இதை தாங்க முடியவில்லை. மது குடிப்பது தவறு என்று
தெரிந்தாலும், அதுதான் வலிக்கு மருந்தாக இருக்கிறது. வேறு தொழிலுக்கும் செல்ல வழியில்லை. என்ன செய்வது?


உடற்பயிற்சி என்பது எல்லோருக்கும் அவசியமான ஒன்று. முரட்டு தனமாகவும், அதிக அளவு எடைகொண்ட மூட்டைகளை சுமக்க கூடாது

0 comments:

கருத்துரையிடுக