siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 11 ஆகஸ்ட், 2012

இலங்கையின் மனித உரிமை மீறல்! நியாயம் தேட பக்கச்சார்பற்ற விசாரணை அவசியம்: சர்வதேச மன்னிப்புச்சபை

 
சனிக்கிழமை, 11 ஓகஸ்ட் 2012,
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் நியாயங்களை தேட ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையிலான பக்கச்சார்பற்ற விசாரணையே ஒரே வழியாகும் என்று சர்வதேச மன்னிப்புச் சபையின் இந்தியாவுக்கான பிரதம நிறைவேற்று அதிகாரி ஆனந்த பத்மநாபன் தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாடு விரைவில் நடைபெறவுள்ள நிலையில், இலங்கையின் பிரச்சினை சர்வதேச கண்ணுக்கு மீண்டும் வெளிப்படும்.
எனினும், இதன்போது ஒருபக்கம் அல்லாது, இலங்கைப் படையினரும் அதேநேரம் விடுதலைப் புலிகளும் செய்த போர்க்குற்றங்களும் முன்னிலைப்படுத்தப்படும் என்று ஆனந்த பத்மநாபன் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கத்தை பொறுத்தவரையில், மனித உரிமைகள் மீறல் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை மேற்கொள்ள வேண்டிய பாரிய பொறுப்பை அது கொண்டுள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் ஊடாக பல உறுதிமொழிகளை வழங்கியுள்ள இலங்கை அரசாங்கம் கடந்த ஜூலையில் வெளியிட்ட குழுவின் இறுதி அறிக்கையிலும் உறுதிமொழிகளை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தமிழக மக்கள், இலங்கை தமிழர்கள் தொடர்பில் அதிக அக்கறை கொண்டுள்ள நிலையில், ஐக்கிய நாடுகளின் சாசனப்படி இலங்கை தமிழர்களின் அகதி நிலைப்பாட்டை உறுதிப்படுத்த வேண்டியது அவசியமாகும் என்று ஆனந்த பத்மநாபன் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையில் சென்னையில் நடைபெறவுள்ள தமிழீழ ஆதரவாளர் மாநாடான டெசோவில் பங்கேற்கவுள்ள அவர், இந்த மாநாடு அரசியல் காரணங்களுக்காக நடத்தப்படுகிறது என்பதை ஏற்றுக்கொண்டார்.
எனினும் சாதாரண மக்கள் மத்தியில் இலங்கை தமிழர்கள் தொடர்பில் அக்கறையைக் கொண்டு வர இந்த மாநாடு உதவும் என்று ஆனந்த பத்மநாபன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்

0 comments:

கருத்துரையிடுக