siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 18 அக்டோபர், 2012

புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் மக்களின் பெருமளவான

Thursday  18  October  2012 By.Rajah. காணிகள் படையினர் ஆக்கிரமிப்பு! இடமின்றி தவிக்கும் மக்கள் முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்புப் பிரதேசத்திலே சுமார் 875 ஏக்கர் நிலப்பரப்பு இன்று வரை இராணுவத்தினரின் பிடியில் உள்ளதுடன், பல வர்த்தக நிலையக் கட்டடங்களும் படையினரின் பயன்பாட்டிலேயே உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்புப் பகுதியில் கமநலச் சேவை நிலையத்தின் முன்பாகவுள்ள பொன்னம்பலம் வைத்தியசாலை இயங்கிய காணியும், அதனைச் சூழவுள்ள பத்துக் குடும்பங்களின் காணிகளும், புதுக்குடியிருப்புச் சந்திப் பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்கள் உள்ளடங்கலாக சுமார் பதினைந்து ஏக்கர் காணிகள் மற்றும் வர்த்தக நிலையங்கள், பொதுமக்களின் வாழ்விடங்கள் என்பவற்றை இலங்கை ராணுவத்தின் 682 ஆவது படைப்பிரிவு பயன்படுத்தி வருகின்றது.
இதேவேளை புதுக்குடியிருப்பு கைவேலிப் பகுதியில் சுமார் 800 ஏக்கர் நிலப்பகுதியை இலங்கை ராணுவத்தின் 68 ஆவது படைப்பிரிவு பிடித்துவைத்துள்ளது. இதைவிட  புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் பகுதியில் பொதுமக்களுக்குச் சொந்தமான சுமார் அறுபது ஏக்கர் நிலப்பகுதியையும் இலங்கை ராணுவத்தின் 683 ஆவது படைப்பிரிவு ஆக்கிரமித்துள்ளது.

இவ்வாறு பொதுமக்களுக்குச் சொந்தமான மேற்படி 875 ஏக்கர் காணி ராணுவத்தினரின் ஆக்கிரமிப்பில் இருப்பதால் இந்தக் காணிகளின் உரிமையாளர்கள் மீள்குடியமர முடியாமலும் வாழ்வாதாரச் செயற்பாடுகளை ஆரம்பிக்க முடியாமலும் பெரும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

இதேவேளை புதுக்குடியிருப்புப் பிரதேச மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கைகளை விடுத்துள்ளதுடன், இது தொடர்பாக மனுக்களையும் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது