siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 14 மே, 2013

தொழில் அதிபர் வீட்டில் நகை கொள்ளை


திருச்சி புத்தூர் பாரதிநகர் அருகே சர்ச் காலனி பகுதியில் வசித்து வருபவர் ஜெய்கண். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
மேலும் கண்டோன்மெண்ட், தில்லைநகர் பகுதியில் பிரபல ஓட்டலும் நடத்தி வருகிறார். ரோட்டரி சங்கத்தில் தலைவராகவும் உள்ளார்.
ஜெய்கண் நேற்று முன்தினம் தனது மனைவி, மகன் மற்றும் குடும்பத்துடன் ராமேசுவரத்திற்கு காரில் புறப்பட்டு சென்றார். இந்த நிலையில் அவரது ஓட்டலில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் ஜெய்கண்ணின் வீட்டுக்கு நேற்று காலை சென்றார். அப்போது வீட்டின் பின்பக்க கதவுகள் உடைக்கப்பட்டு இருந்தை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
மேலும் வீட்டின் முதல் தளத்தில் உள்ள கதவும் உடைக்கப்பட்டு இருந்து. இது குறித்து உடனடியாக அவர் தனது முதலாளி ஜெயக்கண்ணுவிற்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் ஜெய்கண் நேற்று மாலை திருச்சி விரைந்து வந்தார். அப்போது தான் குடும்பத்துடன் வசித்து வரும் முதல் தளத்தில் பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிகள் மற்றும் பொருட்கள் வெளியே சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து திருச்சி புத்தூர் அரசு ஆஸ்பத்திரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த போலீசார் நேற்று இரவு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் விரல் ரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். போலீசார் விசாரணையில் வீட்டில் பீரோவில் இருந்த 50 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.2 1/4 லட்சம் ரொக்க பணத்தை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.
மேலும் மொத்தம் 5 கிலோ எடையுள்ள 6 வெள்ளி தட்டுகளையும் கொள்ளையர்கள் அள்ளிச் சென்றது தெரியவந்தது. கொள்ளை போன நகை மற்றும் வெள்ளி தட்டுகளின் மொத்த மதிப்பு சுமார் ரூ.12 லட்சத்து 40 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த கொள்ளை சம்பவத்தில் 4 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் இணைத்து ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர். மேலும் கொள்ளை நடந்த வீட்டின் கீழ் தளத்தில் யாரும் வசிக்கவில்லை.
வீட்டின் மாடியான முதல் தளத்தில் தான் அவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாததை தெரிந்து கொண்டு பின்பக்கமாக கதவை உடைந்து நுழைந்து வீட்டின் மாடியில் இருந்து நகை, பணத்தை சாகசமாக கொள்ளையடித்து சென்றுள்ளனர். தொழில் அதிபர் குடும்பத்திற்கு நன்கு தெரிந்தவர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் கருதி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து புத்தூர் அரசு ஆஸ்பத்திரி போலீசார் வழக்குப்  பதிந்து கொள்ளையர்களை வலை வீசி தேடி வருகின்றனர். தொழில் அதிபர் வீட்டில் 50 பவுன் நகை மற்றும் பணம் கொள்ளை போன சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 comments:

கருத்துரையிடுக