siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 16 ஆகஸ்ட், 2012

கொழும்பில் தமிழ் வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்


வியாழக்கிழமை, 16 ஓகஸ்ட் 2012,
 
கொழும்பு ஆமர் வீதியைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் ஒருவர் வெள்ளை வானில் சென்ற இனந்தெரியாதவர்களினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
கொழும்பு துறைமுகத்தில் ஏலத்தில் வெள்ளைப்பூண்டு கொள்கலன் ஒன்றை கொள்வனவு செய்த வர்த்தகரே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
கடத்தப்பட்ட தமிழ் வர்த்தகரை விடுதலை செய்ய ஐம்பது லட்ச ரூபா கப்பம் கோரப்பட்டுள்ளது. எனினும் கப்பமாக கோரப்பட்ட பணத்தில் ஏற்கனவே 30 லட்ச ரூபா வழங்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வெள்ளைப்பூண்டு கொள்கலனை 15 லட்ச ரூபாவிற்கு குறித்த வர்த்தகர் ஏலத்தில் கொள்வனவு செய்துள்ளார்.
இவ்வாறு துறைமுகத்தில் ஏலத்தில் கொள்வனவு செய்யப்படும் பொருட்கள் மீள் ஏலத்தில் விட வேண்டியது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
பாதாள உலகக் குழுவினர் இவ்வாறு மீள் ஏலத்தை நடத்தி வருகின்றனர். மீள் ஏலத்தில் பொருட்களை கொள்வனவு செய்வோரே அவற்றைப் பெற்றுக்கொள்ள முடியும். மீள் ஏலத்தில் ஈட்டப்படும் வருமானத்தை பாதாள உலகக் குழுவினர் பெற்றுக் கொள்வர்.
மாளிகாவத்தை போதிராஜா மாவத்தைக்கு அருகாமையில் வெள்ளைப்பூண்டு கொள்கலன் மீள் ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்திலும் குறித்த தமிழ் வர்த்தகரே அந்த வெள்ளைப்பூண்டு கொள்கலனைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
அதற்காக அவர் ஏழரை லட்ச ரூபா மேலதிகமாக ஏலம் கோரியுள்ளார். ஏழரை லட்ச ரூபா பணம் கையில் இல்லாத காரணத்தினால் பணத்தை எடுத்து வரச் சென்ற போது இனந்தெரியாத நபர்கள் கடத்தியுள்ளனர்.
கடத்தப்பட்ட வர்த்தகர் கப்பத் தொகையை குறைக்குமாறு விடுத்த கோரிக்கையை கடத்தல்காரர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
இதன்படி, குறித்த கப்பத் தொகை செலுத்தப்பட்டதனைத் தொடர்ந்து வர்த்தகர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடத்தலில் ஈடுபட்டோர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது