siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 15 செப்டம்பர், 2012

கடந்த எட்டு மாதங்களில் 25,000 வாகன விபத்துகள்

.By.Rajah.இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் வரையிலான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 25,000 வாகன விபத்துகள் இடம்பெற்றுள்ளதுடன் அவ்விபத்துகளால் 1500 பேர் பலியாகியுள்ளதுடன், 11,000 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாகன விபத்துகளைக் கட்டுப்படுத்த பொலிஸார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் அதற்கு சாரதிகளின் ஒத்துழைப்பும் பொதுமக்களின் ஒத்துழைப்பும் தேவையெனவும் தலைமையகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

மதுபோதையில் வாகனங்களைச் செலுத்துதல், கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் வாகனங்களை ஓட்டிச்செல்லல், சாரதிகளிடையேயான போடித்தன்மை, நித்திரை கலக்கத்தில் வாகனங்களைச் செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் இவ்வாறு விபத்துகள் அதிகரிக்கக் காரணமாய் அமைந்துள்ளன.

வாகனவிபத்துகளைக் கட்டுப்படுத்துவதற்கு கடுமையான சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும் அவற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் உள்ளமை கவலைக்குரிய விடயமே.

வாகனவிபத்துகள் அதிகரிப்பதற்கு சாரதிகள் மாத்திரம் காரணம் எனச் சொல்லிவிட முடியாது. பாதசாரிகளின் கவனயீனமும் ஒரு காரணமாய் அமைந்துள்ளது.

எனவே வாகனவிபத்துகளைக் கட்டுப்படுத்துவதற்குப் பொதுமக்களும் தமது ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும். அத்தோடு சாரதிகள் போக்குவரத்து விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும். அதேபோன்று பாதசாரிகளும் பாதைகளைக் கடக்கும் போதும் வாகனங்களில் பயணிக்கும் போதும் ஏனைய பல சந்தர்ப்பங்களிலும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுவதன் மூலம் வாகனவிபத்துகளைக் கட்டுப்படுத்தலாம்