siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 15 செப்டம்பர், 2012

வலி. வடக்கில் மின்சாரம் விநியோகிக்க "வடக்கின் வசந்த' நிதி கிடைக்கவில்லை; சுன்னாகம் பிராந்திய பொறியியலாளர் தெரிவிப்பு

By.Rajah.வலி.வடக்கில் மக்கள் மீளக்குடியமர்ந்துள்ள இடங்களில் பல பகுதிகளுக்கு வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் கீழ் மின்விநியோகம் செய்வதற்கு அமைச்சிலிருந்து இன்னமும் நிதி வழங்கப்படவில்லை என்று மின்சார சபையின் சுன்னாகம் பிராந்திய பொறியியலாளர் எஸ்.ஞானகணேசன் தெரிவித்தார்.
வலி.வடக்கு பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அண்மையில் தெல்லிப்பழை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இதன் போது பொதுமக்கள் தமக்கு வடக்கின் வசந்தம் திட்டத்தின் ஊடாக இலவச மின் இணைப்பு வழங்கப்படவில்லை என்று குற்றஞ்சாட்டினர்.
அத்துடன் தெல்லிப்பழை பிரதேச செயலரால் மக்கள் அண்மையில் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் 143.59 கிலோமீற்றர் பகுதிக்கும் ஏனைய பகுதிகளில் 14.95 கிலோ மீற்றர் பிரதேசத்துக்கும் இன்னமும் மின்விநியோகம் வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இதற்குப் பதிலளித்த மின்சார சபையின் பொறியியலாளர் எஸ்.ஞானகணேசன், கொல்லன்கலட்டி பகுதிக்கு மின்விநியோகம் மேற்கொள்வதற்கு அனுமதி கிடைத்துள்ளது. அதற்கான வேலைகள் இன்னும் சில தினங்களில் ஆரம்பிக்கப்படும்.
தந்தை செல்வாபுரம் பிரதேசத்தில் பிரதான மார்க்கத்தில் மின்விநியோகம் முடிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பகுதிகளிலுள்ள மக்கள் தமது வீட்டு மின் இணைப்பு வேலைகளைப் பூர்த்தி செய்யாததால் எம்மால் இணைப்பை வழங்க முடியாதுள்ளது. மேலும் நாங்கள் மதிப்பீட்டுப் பணிகள் மேற்கொள்ளும்போது தந்தை செல்வாபுரத்தில் உள்ள 2 வீதிகள் பற்றைக் காடுகளாக இருந்தன.
இதனால் நாம் மதிப்பீடுகள் மேற்கொள்ளாததுடன் மின் இணைப்பும் வழங்கவில்லை. இனி அடுத்த கட்டத்தில்தான் அந்தப் பகுதிகளுக்கு மின் வழங்க முடியும். எமக்குத் தற்போது வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் கீழ் இலவச மின்விநியோகம் மேற்கொள்வதற்கு அமைச்சிலிருந்து நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெறவில்லை.
அத்துடன் வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் மின் வழங்கப்பட்ட மக்களுக்கு ஒரு வருடம் இலவச மின்விநியோகம் என்ற திட்டம் கடந்த வருடத்துடன் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பணம் செலுத்த வேண்டும் என்று கூறினார்.
பிரதேச சபைத் தலைவர் சோ.சுகிர்தனல் வீதி விளக்கு பொருத்துவதற்கு மின்சார சபை கட்டணம் அறவிடாமல் செய்ய முடியுமா என்று கேட்டபோது மனித வலுவைப் பயன்படுத்தியே மேற்கொள்வதால் அரைவாசிப் பணத்தைச் செலுத்துமாறும் பிரதம பொறியியலாளர் தெரிவித்தார்