siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 7 அக்டோபர், 2012

சிறுவனின் உயிரை குடித்தது டெங்கு

07.102012.ByRajah.
யாழ்.மாவட்டத்தில் மீண்டும் டெங்குக் காய்ச்சல் தலை தூக்கியுள்ளது. டெங்கு நோயால் பீடிக்கப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருந்த கொக்குவிலைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் சிகிச்சை பயனின்றி நேற்று அங்கு உயிரிழந்தான்.
இதேவேளை, நேற்று சனிக்கிழமை பிற்பகல் தாயொருவரும் அவரது பிள்ளையும், மற்றுமொருவருமாக 3 பேர் டெங்கால் பீடிக்கப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை 5 பேர் டெங்குத் தாக்கத்துக்கு உள்ளாகி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட தாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
கொக்குவில் பகுதியைச் சேர்ந்த 17 வயதுச் சிறுவன் ஒருவரே சிகிச்சை பயனின்றி நேற்று மரணமானான். கொக்குவில் மற்றும் திருநெல்வேலி கலாசாலை வீதியைச் சேர்ந்த 5 பேர் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் குருநகரைச் சேர்ந்த சுமார் 6 பேர்வரை டெங்கு நோயால் பீடிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதுதவிர கொக்குவில், திருநெல்வேலி கலாசாலை வீதியில் சில வாரங்களுக்கு முன்னரும் 11 பேர் டெங்கு நோயால் பீடிக்கப்பட்டடு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுச் சென்றிருந்தனர்.
நேற்றுமுன்தினம்வரை பெரும்பாலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களே பெரும்பாலும் டெங்கால் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இருவாரங்களுக்கு முன்னர் தெல்லிப்பளையிலும், வள்ளுவர்புரம் குடியிருப்பில் 3 பேர் டெங்கு நோயாலும் பீடிக்கப்பட்டதைத் தொடரந்து அங்கு டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கையால் அது கட்டுப்படுத்தப்பட்டது.
ஆனால் இங்கு டெங்கு நடவடிக்கைகள் உடனுக்குடன் உரிய முறையில் செய்யப்பட்டிருந்தால் கட்டுப்படுத்தியிருக்கலாம். மேலதிகாரிகளான யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் யாழ்.பிராந்திய தொற்றுநோய் விஞ்ஞானப் பகுதி வைத்திய அதிகாரி ஆகியோர் இந்த விடயத்தில் தேவையான அளவு அக்கறை கொள்ளவில்லை என்று வைத்திய வட்டாரங்கள் குற்றம் சுமத்துகின்றன.
இதுதொடர்பில் யாழ்.பிராந்தி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரனுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, "டெங்கு யாழ்.மாவட்டத்தில் பரவ ஆரம்பித்துள்ளது.
இதனால் யாழ்.மாவட்டத்தில் டெங்கு கட்டுப்பாட்டு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. தவிர டெங்கு பரவும் இடங்களில் உடனுக்குடன் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று தெரிவித்தார்.