siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 15 டிசம்பர், 2012

வரும் 19ஆம் தேதி என்ன நடக்கும். அச்சத்தில் சசிகலா?

      
னி பெங்களூரு வழக்கு அவ்வளவு​தான்’ என, நீதிபதி மல்லிகார்​ஜுனய்யா ஓய்வுபெற்றதும் உற்சாக​மாகச் சொல்லிவந்த எதிர்த் தரப்பு, புதிய நீதிபதி பாலகிருஷ்ணாவின் அதிரடியால் அதிர்ந்து கிடக்கிறார்கள். அதுவும் 'வருகிற 19-ம் தேதி என்ன நடக்குமோ?’ என சசிகலா கலக்கத்​தில் இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன!
கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் கூடிய விரைவில் தீர்ப்பு வந்துவிடும் என்பதற்கு, கடந்த 10 மற்றும் 11-ம் தேதி பெங்களூரு ஸ்பெஷல் கோர்ட்டில் அரங்கேறிய‌ அதிரடிக் காட்சிக‌ளே அழுத்தமான சாட்சி.
கடந்த 10-ம் தேதி, நீதிபதி பாலகிருஷ்ணா முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்த போது, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நால்வரும் வழக்கம்போல கோர்ட்டுக்கு வரவில்லை. விசாரணை ஆரம்பம் ஆனதும் சசிகலா மற்றும் சுதாகரன் தரப்பில் புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ''சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு படி கடந்த 21 நாட்கள் வழக்கின் அன்மார்க்டு ஆவணங்களைப்பார்த்தோம். எங்கள் தரப்பிடம் இருந்து தமிழக ஊழல் தடுப்புத் துறை போலீஸார் கைப்பற்றிய ஆவணங்களில் 60-க்கும் மேற்பட்ட ஆவணங்களை(60 ஆயிரம் பக்கங்கள்), வழக்கில் பயன்படுத்தவில்லை. அவை வெறுமனே இந்த கோர்ட்டில் பீரோவில் பூட்டி வைக்கப்பட்டிருக்கிறது. எனவே, வழக்கில் பயன்படுத்தாமல் 20 ஆண்டுகளுக்கு மேலாக வைத்திருக்கும் ஆவணங்களையோ அதன் பிரதிகளையோ எங்களுக்குத் திருப்பித்தர வேண்டும். எங்கள் கட்சிக்காரர் பதில் சொல்ல அந்த ஆவணங்கள் தேவைப்படுகிறது'' என்றார் சசிகலாவின் வழக்கறிஞர் மணிசங்கர்.
''இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்?'' என அரசுத் தரப்பு வழக்கறிஞர் சந்தேஷ் சவுட்டாவிடம் நீதிபதி பாலகிருஷ்ணா கேட்​டார். ''1997-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த வழக்கை, எப்படியாவது இழுத்தடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக, இதுவரை 800-க்கும் மேற்பட்ட மனுக்களை எதிர்த் தரப்பில் தாக்கல் செய்து இருக்கிறார்கள். அந்த மனுக்களின் நியாயத்தன்மையை ஆராய்ந்து ஸ்பெஷல் கோர்ட்டும், கர்நாடக ஹை கோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் பெரும்பாலான சமயங்களில் தள்ளுபடி செய்து இருக்கிறது. இருப்பினும், மீண்டும் மீண்டும் மனு போட்டு 'அன்மார்க்டு ஆவணங்களைப் பார்க்க வேண்டும்’ எனக் கேட்டதால், சுப்ரீம் கோர்ட் 21 நாட்கள் அனுமதி அளித்தது. இப்போது அந்த மனுவைக் காரணம் காட்டி புதிய மனுவைப் போடுகிறார்கள். இது வழக்கை இழுத்தடிக்கும் செயலே. வழக்கில் முதல் குற்றவாளியான ஜெயலலிதா கடந்த ஆண்டு நான்கு நாட் கள் கோர்ட்டில் ஆஜராகி நீதி பதியின் 1,384 கேள்விகளுக்குப் பதில் அளித்தார். ஆனால், இரண்டாம் குற்றவாளியான சசிகலா, கடந்த 13 மாதங்களாக மீதி இருக்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் மனு மேல் மனு போட்டு வழக்கை நகரவிடாமல் காலம் தாழ்த்தி வருகிறார்'' என்று கடுமையாக ஆட்சேபித்தார்.
இருவரின் வாதங்களையும் கேட்ட நீதிபதி, ''இந்த மனு மீதான தீர்ப்பை நாளை சொல்கிறேன். ஒருவேளை மனு தள்ளுபடி செய்யப்பட்டால், இரண்டாவது குற்றவாளியிடம் மீதி இருக்கும் கேள்விகள் நிச்சயம் கேட்கப்படும்'' என்றார். இதனால் ஷாக் ஆன வழக்கறிஞர்கள், உடனேசசிகலாவுக்குத் தகவலை பாஸ் செய்தனர். 'நாளைக்கு கோர்ட்டை அவாய்ட் பண்ண எதாவது சான்ஸ் இருக்கா?’ என்று சசிகலா கேட்க, 'இல்லம்மா... புது ஜட்ஜ் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட்’ என்றார்களாம். அதனால், மறு நாள் பெங்களூரு கோர்ட்டுக்கு வர முடிவு எடுத்தாராம் சசி.
உதவியாளர்கூட இல்லாமல் தனியாக‌ பெங்​களூருக்குக் கிளம்பிய சசி​கலாவுக்கு, கேபிடல் ஹோட்​டலில் எக்ஸிகியூட்டிவ் ரூம் தயாராக இருந்தது. காலை 10.45 மணிக்கு கறுப்பு இன்னோவாவில் கோர்ட்​டுக்குள் நுழைந்தார். கூலிங் கிளாஸ், ஹேண்ட் பேக், பேனா, பென்சில், பிளாஸ்க் சகிதம் வந்தார். போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டதால் 11.30 மணிக்குத்தான் நீதிபதி பாலகிருஷ்ணா கேபினுக்குள் நுழைந்தார். சசிகலாவும் அவசர அவசரமாக கோர்ட்டுக்குள் நுழைந்தார். ஆனால், அரை மணி நேரத்துக்கு மேலாகியும் கோர்ட் ஹாலுக்கு நீதிபதி வரவில்லை. தனது அறையில் அமர்ந்தவாறு தீர்ப்பை டைப் செய்தாராம். சரியாக 12.35 மணிக்கு கோர்ட் ஹாலுக்குள் நுழைந்த நீதிபதி பாலகிருஷ்ணாவுக்கு குற்றவாளிக் கூண்டில் நின்றவாறு 'வணக்கம்’ என கைகூப்பினார் சசிகலா. அவரைக் கவனிக்காத நீதிபதி, ''சசிகலா, சுதாகரன் தரப்பில் ஆவணங்கள் கோரிய மனுவை தள்ளுபடி செய்கிறேன். வரும் 19-ம் தேதி இரண்டாவது குற்றவாளியான சசிகலாவிடம் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 313-ன் படி கேள்விகள் கேட்கப்படும். அன்றைக்கு நிச்சயம் அவர் ஆஜராக வேண்டும். குற்றவாளியின் பதில்களை மொழிபெயர்க்க ஏதுவாக மொழிபெயர்ப்பாளாரும் கோர்ட்டில் ஆஜராக வேண்டும்'' என்றார்.
கோர்ட்டை விட்டு வெளியேவந்த சசிகலாவின் முகத்தில் பழைய உற்சாகம் இல்லை. தன்னுடைய வழக்கறிஞரிடம் ஏதோ சீரியஸாகப் பேசிவிட்டு காரில் ஏறிச்சென்றார். ஏற்கெனவே, 532 கேள்விகளுக்குப் பதில் சொல்லி இருக்கும் சசிகலாவிடம் மீதி இருக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கேள்விகளை நீதிபதி பாலகிருஷ்ணா கேட்க இருக்கிறாராம். இந்தக் கேள்விகள் அனைத்தும் முன்னாள் நீதிபதி மல்லி கார்ஜுனய்யா தயார் செய்துவிட்டுப் போனதாம்.
19-ம் தேதிக்கான தயாரிப்புகளில் இருக்கிறார் சசி!

0 comments:

கருத்துரையிடுக