siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 30 டிசம்பர், 2012

நல்லூர் ஆலயத்துக்கு முன் மகேஸ்வரனின் சகோதரர் மீது நேற்று அசிட்

           
 தாக்குதல் சம்பவம்!முன்னாள் இந்து கலாசார அமைச்சர் தியாகராசா மகேஸ்வரனின் சகோதரரும், பிரபல வர்த்தகருமான தியாகராசா துவாரகேஸ்வரன் (வயது41) மீது நேற்று சனிக்கிழமை நல்லூரில் வைத்து அசிட் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


முதுகிலும், கழுத்துப் பகுதியிலும் படுகாயமடைந்த அவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அங்கு தனக்குப் பாதுகாப்பு இல்லை என்று கூறி வெளியேறிய அவர் கொழும்பு வைத்திய சாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

இந்தத் தாக்குதல் சம்பவம் யாழ்.நல்லூர் கந்தசுவாமி கோயிலின் முன்பாக நேற்று முற்பகல் 9 மணியளவில் இடம்பெற்றது.

துவாரகேஸ்வரன் நல்லூர் கந்தசாமி கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்துவிட்டுத் திரும்பி வந்து தனது வாகனத்தில் ஏறிப் புறப்படுவதற்கு முற்பட்டபோதே அவர்மீது அசிட் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அவர் உடனடியாக தான் அணிந்திருந்த சேர்ட்டைக் கழற்றிவிட்டு அவ்விடத்தில் தேங்கியிருந்த மழைநீரில் உருண்டு புரண்டு எரிவு ஓரளவு குறைந்ததும் உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து அவர் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலையில் தங்கிச் சிகிச்சை பெறுவது தனக்குப் பாதுகாப்பில்லை என்று கூறியுள்ள அவர் கொழும்பில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் நேற்றுச் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார்.

அசிட் வீச்சால் அவரது முதுகுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறியின் பிரத்தியேகச் செயலாளரும் முன்னாள் இராணுவ அதிகாரியுமான ஜெயக்கொடி என்பரே தன்மீது அசிட் வீசித் தாக்குதல் நடத்தியதாக துவாரகேஸ்வரன் தெரிவித்தார். அசிட் வீசியதைத் தொடர்ந்து ஜெயக்கொடி மோட்டார் சைக்கிளில் அந்த இடத்டதில் இருந்து சென்றார்.

அவருடன் இராணுவத்தினர் எனச் சந்தேகிக்கும் நான்கு பேரும் உடனிருந்தனர் எனவும் துவாரகேஸ்வரன் கூறினார். நேற்றுமுன்தினம் காரைநகர் சிவன்கோயிலுக்குத் தான் சென்றபோது அங்கும் ஜெயக்கொடி என்பவர் என்னைப் பின்தொடர்ந்திருந்தார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக யாழ்.பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். இதுதொடர்பில் யாழ்.பொலிஸ் நிலைய தலைமைப் பொறுப்பதிகாரி சமன் சிகேராவுடன் தொடர்புகொண்டபோது,

அசிட் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆளுநரின் பிரத்தியேகச் செயலாளர் ஜெயக்கொடி என்பவரே அசிட் வீசித் தாக்குதல் நடத்தியதாகத் தான் சந்தேகிப்பதாக துவாரகேஸ்வரனின் முறைப்பாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

இதேவேளை

ஜெயக்கொடி என்பவர் முரண்பாடு ஒன்று காரணமாகவே இவ்வாறு நடந்துகொண்டுள்ளார். முன்னரும் இவர் முரண்பட்டமையால் யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதிக்கும் தெரியப்படுத்தினேன். கொழும்பு இராணுவத் தலைமையகத்திலும் முறைப்பாடு செய்தேன். தற்போது ஜெயக்கொடிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை நடைபெறுகிறது. அதனாலேயே என்மீது அவர் தாக்குதல் நடத்தினார் என்றார் துவாரகேஸ்வரன்

0 comments:

கருத்துரையிடுக