siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

கேப்பாப்புலவு பிரதேசத்தை ஆக்கிரமித்து மக்களை அவலநிலைக்குள்ளாக்கியுள்ள இராணுவம்!



வெள்ளிக்கிழமை, 17 ஓகஸ்ட் 2012,


முல்லைத்தீவு மாவட்டம், கேப்பாப்புலவு பகுதியில் இராணுவம் அபகரித்து வைத்துள்ள சுமார் 2 ஆயிரத்து 282 ஏக்கர் காணிக்குரிய அனுமதிப்பத்திரத்தை தம்மிடம் வழங்குமாறு இராணுவத்தினர் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மிகவும் வளமான விவசாயக் கிராமமாகக் காணப்பட்ட கேப்பாப்புலவுக் கிராமத்தில் சுமார் 700 ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வந்தன.
தற்போது மக்களுக்குச் சொந்தமான காணிகளை இராணுவத்தினர் அபகரித்து வைத்துள்ளனர்.

மேற்படி பகுதிகளை இலங்கை இராணுவத்தின் 591ஆவது படைப்பிரிவு ஆக்கிரமித்து வைத்துள்ளதுடன் அவற்றைத் தமக்கு வழங்குமாறு அரச அதிகாரிகளைத் தொடர்ந்தும் வற்புறுத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்தப் பகுதியிலுள்ள மக்களை வேறிடம் ஒன்றில் மீள்குடியமர்த்துமாறும் இராணுவத்தினர் கூறி வருகின்றனர்.
இதேவேளை, இந்தப் பகுதி மக்களின் வாழ்வாதார வளங்களான கால்நடைகளும் படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் காணப்படுகின்றன.
அத்துடன் இந்தப் பகுதி மக்களின் சிறுகடல் தொழில்களும் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை இராணுவத்தினர் தம்வசம் வைத்திருக்கின்றமையினால் மக்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
அத்துடன் அவர்களின் வாழ்வாதாரங்களும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலை தொடருமானால் தமது இருப்பே கேள்விக்குறியாகி விடுமென இங்குள்ள மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
ஏற்கனவே மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ள முல்லைத்தீவில் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளதால் விவசாயமும் பாதிக்கப்படுகின்ற அவலநிலை உருவாகியுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்