siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

அவுஸ்திரேலியாவின் புதிய தீர்மானத்தை எதிர்த்து கிறிஸ்மஸ் தீவில் புகலிடக் கோரிக்கையாளர்கள் உணவுத் தவிர்ப்பில்

26.08.2012.
 
புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசின் புதிய தீர்மானங்களையடுத்து, கிறிஸ்மஸ் தீவில் உள்ள தடுப்பு முகாம் ஒன்றில் புகலிடக் கோரிக்கையாளர்கள் பலர் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

புகலிடக் கோரிக்கையாளர்களாக ஏற்றுக்கொள்ளாது அக் கோரிக்கையை பரிசீலிப்பதற்காக நவ்றூவுக்கு அவுஸ்திரேலிய அரசு அனுப்பிவைப்பதால், தமது கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாமல் பல ஆண்டுகளுக்கு அத் தீவிலேயே தங்கிவிட நேரிடும் என அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எனவே அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

பாதுகாப்பற்ற படகுப் பயணங்கள் மூலம் அவுஸ்திரேலியாவுக்குள் வரமுயற்சிப்போரை தடுத்து வைப்பதற்காக நவ்றூ மற்றும் பப்புவா நியு கினி ஆகிய இடங்களில் விசாரணை மையங்களை திறப்பதற்கு அண்மையில் அவுஸ்திரேலிய நாடாளுமன்றம் அனுமதி வழங்கியது.

அவுஸ்திரேலியா நோக்கி வருபவர்கள் நேராக இந்த தடுப்பு முகாம்களுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் எனவும் தாம் தங்கியிருக்கும் இடைத்தங்கல் இடங்களிலிருந்து சட்டரீதியான வழிமுறைகளில் தஞ்சம் கோருபவர்களுக்கு அதிக வாய்ப்புகள் அளிக்கப்படும் எனவும் அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கிலார்ட் கூறியுள்ளார்.

ஆனால் இந்த முடிவுக்கு மனிதவுரிமைகள் அமைப்பு மற்றும் உள்நாட்டு அமைப்புக்கள் போன்றவற்றால் பலத்த எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.