siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 18 செப்டம்பர், 2012

தமிழர்களின் பூர்வீக இடங்களில் சிங்களவர்களின் ஆதிக்கம்! இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும்! இலங்கை அகதிகள் கோரிக்கை

 
 
18.09.2012.By.Rajah,இலங்கையில் தமிழர்களின் பூர்வீக இடங்கள் சிங்கள மக்களின் ஆதிக்கம் பெற்ற பகுதிகளாகி வருவதாகக் கேள்விப்படுகிறோம். அதனால் நாங்கள் இலங்கைக்கு செல்ல விரும்பவில்லை. இந்திய அரசு எங்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று இலங்கை அகதிகள் கோரிக்கை விடுத்தனர்.
புதுடில்லியில் சனி, ஞாயிறு இரு தினங்களாக தினமணியும், டில்லித் தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்திய அகில இந்திய தமிழ் அமைப்புகள் மாநாட்டில் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதில் தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம், காண்டியபுரம் அகதிகள் முகாமைச் சேர்ந்த இலங்கை அகதிகள் ஐக்கிய முன்னணி அமைப்பில் இருந்து அதன் தலைவர் எஸ்.ஆர். அந்தோனி, செயலர் பாலகிருஷ்ணன், பொருளாளர் பாஸ்கர் என்கிற ஏசுதாஸ், உதவிச் செயலர் பிரான்ஸிஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மாநாடு குறித்தும், தங்களுடைய எதிர்பார்ப்பு குறித்தும் "தினமணி' செய்தியாளரிடம் அவர்கள் கூறியது:
அகதிகள் முகாமை விட்டு நாங்கள் வெளிமாவட்டம் செல்வதற்கே முகாம் ஆணையரிடம் அனுமதி பெற வேண்டும். இந்நிலையில் தினமணியும், டில்லித் தமிழ்ச் சங்கமும் உலகத் தமிழர்களை ஒன்றுசேர்க்க ஒரு மாநாட்டை நடத்துகிறார்கள் என்பதை அறிந்து மகிழ்வுற்றோம்.
மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என்ற எங்களது ஆவலைப் பூர்த்தி செய்ய சட்ட ஆலோசகர் புனித தேவகுமார் ஆலோசனை அளித்தார். அதன் பேரில் முகாமின் ஆணையரிடம் உரிய அனுமதி பெற்று இந்த மாநாட்டில் பங்கேற்றோம்.
வெளிநாடுகளில் வாழும் எங்களது உறவுகளைச் சந்திப்பதற்கான வாய்ப்பை எதிர்பார்த்து வந்தோம். பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தமிழர்களைப் பார்த்தபோது மனம் நெகிழ்ந்தது.
1983-ம் ஆண்டில் இலங்கையில் ஏற்பட்ட கலவரத்தின்போது அகதிகளாக இந்தியா வந்த தமிழர்களுக்கும், மலையகத் தமிழர்களுக்கும் அடைக்கலம் கொடுத்து ஆதரவுக் கரம் நீட்டிய இந்திய அரசையும், தமிழக அரசையும் எங்களால் மறக்க முடியாது.
தமிழகத்தில் உள்ள 117 முகாம்களில் சுமார் 70,000 அகதிகள் இருக்கிறோம். வெளிப்பதிவாக 50,000 அகதிகள் உள்ளனர். இவர்களில் 32,000 பேர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். இலங்கையில் மலையகத் தேயிலைத் தோட்டங்களில் இருந்தவர்கள்.
அகதிகளாக தமிழகம் வந்து கால் நூற்றாண்டுக்கும் மேலாக குடியிருந்து வருகிறோம். எங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் சலுகைகள் அளித்தாலும் குடியுரிமை, வாக்குரிமை இல்லாததால் நாடற்றவர்களாக உணர்கிறோம்.
கல்வி, வேலைவாய்ப்பு, சொத்துரிமை என பலவற்றையும் முறைப்படி பெற முடியாதவர்களாக இருந்து வருகிறோம்.
இலங்கையில் சூழல் மாறுவதாகத் தெரியவில்லை. அப்படியே மாறினாலும் அங்கே செல்ல விரும்பவில்லை.
காரணம், அகதிகளாக இங்கு வந்த பலரும் முதியவர்களாகிவிட்டனர். அவர்களது குழந்தைகள் வளர்ந்துவிட்டனர். அவர்களுக்கு இலங்கையும், அங்கிருக்கும் பழக்கம், கலாசாரம் தெரியாது. அவர்கள் இந்தியக் கலாசாரத்துடன் தங்களை இணைத்துக் கொண்டுவிட்டனர்.
ஆகவே, எங்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும்.
இலங்கையில் தமிழர்களின் பூர்விக இடங்கள் சிங்கள மக்களின் ஆதிக்கம் பெற்ற பகுதிகளாகி வருவதாகக் கேள்விப்படுகிறோம்.
நாங்கள் மீண்டும் இலங்கைக்குச் சென்றால் எங்களை இந்தியர்களாகத்தான் பார்க்கின்றனர். அங்கிருந்து இங்கே வந்தால் இலங்கை அகதிகளாகப் பார்க்கின்றனர்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பலரும் இந்தியக் குடியுரிமை பெற விரும்புவதால் இக்கோரிக்கையை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும்.
இது குறித்து தமிழக முதல்வரையும், மத்திய அரசையும் அணுக டில்லித் தமிழ்ச் சங்கம் மூலம் முயற்சி மேற்கொள்ள இருக்கிறோம் என்றனர்