siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்; இலங்கை ஆசிரியர் சங்கம்

28.08.2012.BY.rajah.
நடைபெற்று முடிந்த 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் ஏற்பட்ட மோசடியில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
வினாத்தாள் மோசடி தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலினைத் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் மேற்கண்டவாறு எமது செய்திப் பிரிவுக்கு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
நேற்று முன்தினம் இவ்வாண்டுக்கான 5ஆம் ஆண்டுப் பரீட்சை நாடளாவிய ரீதியில் 2,803 பரீட்சை மத்திய நிலையங்களில் மூன்று இலட்சத்து நாற்பத்தெட்டாயிரத்து நானூற்றுப் பத்து பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.
அதன் போது தேசியக் கொடியின் சிறப்புப் பற்றி எழுதுவதற்கான கட்டுரை வினா தென்னிலங்கையின் பல இடங்களில் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாக எமக்கு முறைப்பாடு கிடைக்கப்பட்டதை அடுத்து அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரீட்சை ஆணையாளருக்கு தெரியப்படுத்தப்பட்டதுடன் விசாரணைகளை நடாத்தி உண்மையினைக் கண்டறியுமாறு கோரப்பட்டது.
அதன்படி கம்பகா கடவத்த போன்ற பல பகுதிகளில் இவ்வாறான செயற்பாடுகள் நடைபெற்றதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளது.
எனினும் குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் உதவியுடன் இது தொடர்பில் ஆராய உள்ளதாக அவர் தெரிவித்தார்.ஆனாலும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
இதனால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக பரீட்சை ஆணையாளர் கூறியுள்ளார். எவ்வாறாயினும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். இல்லையேல் ஆசிரியர் சங்கம் மேலதிக நடவடிக்கை எடுக்க நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்