siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 25 ஜூலை, 2012

சம்பூரில் அணுமின் நிலையம் அமைப்பது குறித்து பாகிஸ்தான் இலங்கையுடன் பேச்சு!– அதிர்ச்சியில் இந்தியா

 
புதன்கிழமை, 25 யூலை 2012,
திருகோணமலை, சம்பூரில் அணுமின் நிலையம் ஒன்றை அமைப்பது குறித்து இலங்கையுடன் பாகிஸ்தான் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளமையானது, இந்தியாவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக இந்தியா ரூடே செய்தி வெளியிட்டுள்ளது.
கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் மூலம் சவுத் புளொக்கிற்கு கிடைத்துள்ள இந்தச் செய்தி இந்தியாவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் ஆதரவுடன், இலங்கையில் தலையீடுகளை அதிகரிக்கும் பாகிஸ்தானின் பாரிய திட்டத்தின் ஒரு பகுதியே இந்தத் தந்திரோபாயமாகும்.
இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தா கடந்தவாரம் புதுடெல்லியில் இருந்தார்.
அவர், இலங்கையில் பாகிஸ்தானின் அண்மைய நகர்வுகள் குறித்த விபரங்களை உயர்மட்ட அதிகாரிகளுக்கு விளக்கியுள்ளதாக நம்பப்படுகிறது.
கொழும்புடன் பாதுகாப்பு வர்த்தகத்தை விரிவாக்கவும் பாகிஸ்தான் முனைகிறது.
இலங்கையுடன் பாதுகாப்பு உறவுகளை வைத்துக் கொள்வதற்கு, தமிழ்நாட்டில் உள்ள தமது பங்காளிக்கட்சியின் எதிர்ப்பை காங்கிரஸ் கூட்டணி அரசு எதிர்கொள்ளும் நிலையில், இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு பாகிஸ்தான் சத்தமின்றி இலங்கைக்குள் நுழைந்துள்ளது.
அதேவேளை, பாகிஸ்தானின் உதவியுடன் ரி-55 டாங்குகளின் இயந்திரங்களை மறுசீரமைத்தல், மற்றும் டாங்குகளின் பீரங்கிகள் மற்றும் துப்பாக்கிகளின் சூட்டுக் கட்டுப்பாட்டுக் கருவிகளை நவீனமயப்படுத்துவது குறித்தும் சிறிலங்கா கலந்துரையாடியுள்ளது.
கொழும்புக்கு எந்தவொரு பாதுகாப்பு உதவிகளையோ அல்லது தளபாடங்களையோ வழங்கக் கூடாது என்று சென்னைப் பங்காளிகள் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, இலங்கையின் பாதுகாப்புத்துறைக்குள் பாகிஸ்தான் காலடி எடுத்து வைத்துள்ளது.
இந்த அழுத்தத்தினால் இலங்கையுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாடு செய்து கொள்ளப்படுவதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அண்மையில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இலங்கை எதிராக இந்தியா வாக்களித்தது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் இடைவெளியை ஏற்படுத்தியுள்ளதாகவும் இந்தியா ரூடே மேலும் குறிப்பிட்டுள்ளது

0 comments:

கருத்துரையிடுக