அமெரிக்காவின் குடியரசு கட்சியை சேர்ந்த "செனட்" உறுப்பினர் ரோஜர் விக்கருக்கு மர்ம கடிதம் ஒன்று டென்னீசி மாகாணத்தில் உள்ள மெம் பிஸ் நகரில் இருந்த தபால் நிலையம் வழியாக அனுப்பப்பட்டிருந்தது.
ஆனால், அந்த கடிதத்தை அனுப்பியவரின் முகவரி எதுவும் குறிப்பிடப்படவில்லை. மேலும் அதில் செனட் உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த விக்கர் இது குறித்து உளவுத்துறையிடம் அவர் புகார் செய்தார்.
அதை தொடர்ந்து அந்த கடிதம் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. சோதனை நடத்திய போது அதில் "ரிசின்" என்ற கொடிய விஷம் தடவப்பட்டிருந்தது தெரியவந்தது.
கடிதத்தை பிரித்து படிக்கும் போதும் கையால் நாவில் எச்சில் படுத்தும் போதும் விஷம் உடலில் பரவி மரணத்தை ஏற்படுத்த இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
அந்த கடிதத்தை அனுப்பியது யாரென தெரியவில்லை. இது குறித்து உளவுத்துறையும், பொலிசாரும் அதிரடி விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். "செனட்" உறுப்பினர்களின் ஊழியர்களும் தீவிர விசாரணை உட்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், "செனட்" உறுப்பினர்களுக்கு வரும் மெயில் கடிதங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த தபால் பொஸ்டனில் குண்டு வெடிப்பு நடந்த மறுநாள் "செனட்" உறுப்பினர் விக்கருக்கு கிடைத்தது.
அமெரிக்காவில் கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் திகதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களுக்கு பின்னர் "ஆந்த்ராக்ஸ்" விஷகிருமி பார்சல்கள் அனுப்பப்பட்டன. அதன் பின்னர் தற்போது விஷம் தடவிய கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இது அமெரிக்க "செனட்" உறுப்பினர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.