அமெரிக்காவில் உள்ள ஹொட்டல் ஒன்றில் சாப்பிட வந்த குடும்பத்தினர் 32,000 டொலர் பணத்தை மறந்து விட்டு சென்றதை தொடர்ந்து, அதனை உரியவரிடம் ஒப்படைத்த அந்த ஹொட்டல் சர்வரின் நேர்மைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
மத்திய கலிபோர்னியா நகரில் Applebee என்ற உயர்தர ஹொட்டல் ஒன்று இயங்கி வருகிறது.
இந்த ஹொட்டலில் Brian Geery(33) என்ற நபர் கடந்த 10 ஆண்டுகளாக சர்வராக பணி புரிந்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று அந்த ஹொட்டலுக்கு ஒரு குடும்பத்தினர் உணவருந்த வந்துள்ளனர். அவர்களுக்கு Brian Geery தான் உணவுகளை பரிமாரியுள்ளார்.
உணவை முடித்துவிட்டு அந்த குடும்பத்தினர் ஹொட்டலை விட்டு வெளியே சென்றுள்ளனர்.
அப்போது, மேசையை சுத்தம் செய்ய வந்த Brian Geery, அங்கு ஒரு ஓரத்தில் சிறிய பை ஒன்று இருந்ததை கண்டு வியப்படைந்துள்ளார்.
அதனை உடனடியாக எடுத்துக்கொண்டு தனது மேலாளரிடம் காட்டியுள்ளார். ‘அதற்குள் ஏதாவது மருந்து மாத்திரைகள் இருக்கலாம்’ என மேலாளர் கூறியுள்ளார்.
ஆனால், சந்தேகம் அடைந்த Brian Geery, மேலாளரின் சம்மதம் பெற்று அந்த பையை திறந்து பார்த்தபோது அதிர்ச்சியில் மூழ்கியுள்ளார். உள்ளே கட்டுக்கட்டாக டொலர் அடுக்கி
வைக்கப்பட்டுள்ளது.
அதன் மொத்த தொகையானது 32,000 டொலர் ஆகும். அதாவது அந்த சர்வரின் ஆண்டு வருமானத்திற்கு சமமான டொலர்.
பணத்தை கண்ட சர்வர் உடனடியாக தனது முதலாளியிடம் தெரிவித்து விட்டு பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.
உடனே ஹொட்டலுக்கு வந்த பொலிசார், சர்வரிடம் இருந்த பணத்தை பெற்று சென்றனர். பின்னர், பணத்தை காணவில்லை என அந்த குடும்பத்தினர் பொலிசாருக்கு புகார் அளித்தபோது அதனை அவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
இது குறித்து பேசிய ஹொட்டல் இயக்குனர் Carrie Hellyer, பணத்தை விட்டு சென்ற அறையில் கண்காணிப்பு கமெராக்கள் எதுவும் இல்லை. சர்வர் அந்த பணத்தை எடுத்திருந்தாலும், அதனை கண்டுபிடித்திருக்க
முடியாது.
ஆனால், சர்வருக்கு கர்மா மீது அதிக நம்பிக்கை உள்ளது. தான் மற்றவருக்கு செய்யும் துன்பம் தனக்கும் ஒரு நாள் ஏற்படும் என்பதை
ஆழமாக நம்புகிறார்.
பணத்தை நேர்மையாக ஒப்படைத்த சர்வருக்கு குடும்பத்தினர் சன்மானம் கொடுக்க முயன்றுள்ளனர். ஆனால், அதனை சர்வர் மறுத்துவிட்டது அவரது நல்ல குணத்திற்கு எடுத்துக்காட்டு’
என கூறியுள்ளார்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக அவர் பத்திரிக்கைகளுக்கு பேட்டி அளிக்கவும் விரும்பாததால், நான் தான் இந்த செய்தியை வெளியிட்டுள்ளதாக Carrie Hellyer தெரிவித்துள்ளார்.