கார் விபத்தில் பலியான சினிமா நண்பனின் பெயரை மகளுக்கு சூட்டிய ஹாலிவுட் நடிகர் வின் டீசல்
ப்ரைன் ஓ கார்னர்’ என்ற கதாபாத்திரத்தில், அசுர வேகத்தில் அசால்ட்டாக காரை ஓட்டிய ஸ்டைலிஷ் ஹீரோ ’பவுல் வாக்கர்’, ’பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ்’ படம் பார்த்த ஒவ்வோரு ரசிகனின் மனதிலும் பச்சக்கென்று ஒட்டிக் கொண்டார். இந்த படத்தின் தொடர்ச்சியாக வந்த படங்களிலும் அதிவேகமாக காரை ஓட்டி ரசிகர்களை பரவசத்தின் எல்லைக்கே அழைத்துச் சென்ற பவுல் வாக்கர், 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த கார் விபத்தில் பலியாகி பல ரசிகர்களை ஆழ்ந்த சோகத்திலும் ஆழ்த்தினார்.
அவரது சக நடிகரும், உயிர் நண்பருமான ’வின் டீசல்’ பவுலின் மரணத்திற்கு பல மேடைகளில் அஞ்சலி செலுத்தி இருந்தாலும், விரைவில் திரைக்கு வர இருக்கும் ’பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ்’ திரைப்பட வரிசையின் 7 வது பாகமான ’ப்யூரியஸ் 7’ திரையிடல் விழாவில் தன் மகளுக்கு ’பவுலின்’ என்று பெயர் வைத்திருப்பதாக தெரிவித்து, தன் ஆருயிர் நண்பன் பவுலுக்கு தனது நினைவுகளால் அஞ்சலி செலுத்தினார்.
விழாவில் பேசிய அவர் “வேறு யாரையும் ஒரே கருவில் பிறந்தவர்களைப் போல் நான் நினைத்ததில்லை. ஆனால் பவுல்... அவன் ஒரு அற்புதமான ஆன்மா... அவனுடைய நினைவை சுமந்து கொண்டிருப்பது, என் நினைவின், என் வாழ்வின் ஒரு பகுதி. திரைப்படத்தில் இருப்பது போன்றே உண்மையான வாழ்க்கையிலும் அவனுக்கும் எனக்குமான உறவு அன்பால் நிறைந்தது. ஒரு கொடூரமான கார் விபத்தினால், நான் என்
சிறந்த நண்பனை, என் சகோதரனை இழந்து விட்டேன் “ என்று சொன்னபடி, உணர்ச்சிவசப்பட்டு மேடையில் ஸ்தம்பித்து நின்ற வின் டீசலை ரசிகர்கள் ஆசுவாசப்படுத்தினர்.
பொதுவாகவே தனது அந்தரங்க விஷயங்கள் பற்றி அதிகம் பகிர்ந்து கொள்ளாத வின் டீசல் கடந்த மார்ச் 16-ம் தேதி தனக்கும் தனது நீண்ட நாள் பெண் தோழி பலோமா ஜிமனேசுக்கும் பெண் குழந்தை பிறந்துள்ளதாக பேஸ்புக்கில் தெரிவித்தார். இவர்களுக்கு ரிலே மற்றும் வின்செண்ட் சின்க்ளேர் என்று இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.