கனேடிய வெளிவிவகார அமைச்சின் ஐவாத் குரேசி தலைமையிலான உயர் மட்ட அதிகாரிகளைச் சேர்ந்த மூவரடங்கிய குழுவினர் இன்று(11) யாழ் மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டனர்.
குறித்த குழுவினர் யாழ் மாவட்டச் செயலகத்திற்கு விஐயம் மேற்கொண்டு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
யாழ் மாவட்டத்தில் தொழில் வாய்ப்பினை எதிர்பார்த்திருக்கும் இளைஞர், யுவதிகளுக்கான தொழில் வாய்ப்பு மற்றும் அண்மையில் மீள்குடியேறிய மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பெற்றுத் தருவதற்குக் கனேடிய அரசாங்கம் பூரண ஒத்துழைப்புக்களை எதிர்காலத்தில் வழங்குவதற்குத் தயாராக உள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் கூறினார்.
மேலும், இச்சந்திப்பில் யாழ் மாவட்டத்தில் கனேடிய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் பல்வேறு அபிவிருத்திச் செயற் திட்டங்கள் மற்றும் யாழ் மாவட்டத்தின் தற்போதைய தேவைப்பாடுகள் போன்ற விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.