சுவிட்சர்லாந்தை விட அமெரிக்காவில் வாழ்வதையே விரும்புகிறேன் என்று பிரபல ராக் பாடகர் ஜானி ஷாலிடே தெரிவித்துள்ளார்.
பிரெஞ்சு நாட்டின் மிகப் பிரபலமான ராக் பாடகர் ஜானி ஷாலிடே பாடகர் மட்டுமல்லாமல், நடிகரும் ஆவார், இவர் தனது 70 வயதிலும் மேடைக் கச்சேரிகளிலும், பிரெஞ்சுத் திரைப்படங்களிலும் திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார்.
இவர் நாற்பது வருடங்களாக ராக் ஸ்டாராக பிரெஞ்சு நாட்டு மக்களின் நீங்கா இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் இவர், தான் சேர்த்து வைத்த பணத்தில் சுவிட்சர்லாந்திலுள்ள GSTAAD என்ற பெரிய வாசஸ்தலத்தை விலைக்கு வாங்கியிருந்தார்.
இதனால் பிரெஞ்சு அரசாங்கம் இவர் மீது வருமான வரி விதித்திருந்ததால், வருமான வரியிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக பிரெஞ்சு நாட்டிலிருந்து, சுவிஸ் நாட்டிற்கு குடும்பத்துடன் புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டிலுள்ள GSTAADஇல் 2006ம் ஆண்டு குடி புகுந்தார்.
சுவிட்சர்லாந்தின் வருமான வரித்திட்டத்தின்படி, சுவிட்சர்லாந்தில் குடிபுகும் பணக்கார வெளிநாட்டவர்கள் 6 மாதங்களும் 1 நாளும் நிரந்தரமாகத் தங்கியிருந்து நிரந்தர குடியுரிமை பெற்றிருந்தால், அவர்களுக்கு வருமான வரியில் நிறையச் சலுகைகள் அளிக்கப்படுகிறது.
அவர்களது செலவினைப் பெறுத்து, ஒரு குறிப்பிட்ட அளவு வருமான வரி கட்டினால் போதுமானது, இந்த வரிச்சலுகையைப் பெறவே ஜானி ஷாலிடே இங்கு கொஞ்சக் காலம் வாழ்ந்துள்ளார்.
ஆனால், சுவிஸ் வருமானத் துறை அதிகாரிகள் இவர் தொடர்ச்சியாக ஆறு மாத காலங்களாக சுவிட்சர்லாந்தில் இருக்க இயலாமல் வேறு இடங்களுக்கு பிரயாணம் செய்திருந்ததால், இவருக்கு வருமான வரியில் சலுகைகள் அளிக்கவில்லை.
இதனால் கோபமடைந்த ஜானி ஷாலிடே தன்னுடைய இருப்பிடத்தை சுவிட்சர்லாந்திலுள்ள GSTAAD ஐ விட்டு அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியாவிற்கு மாற்றிவிடப்போவதாக அறிவித்துள்ளார். மேலும் கலிபோர்னியாவில் வாழ்வதையே விரும்புகின்றேன் என்று தெரிவித்துள்ளார்.