இங்கிலாந்து நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 2 லட்சம் மக்கள் நாய்கடிக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் சிலர் உயிரிழக்கும் அபாயமும் நேர்கிறது.
கடந்த ஆண்டுகளில் 16 பேர் நாய் கடித்து உயிரிழந்துள்ளனர். எனவே, நாய்களை பொது இடங்களில் அலைய விடும் உரிமையாளர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட காலமாக கூறி வருகின்றனர்.
தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தின்படி, ஒரு நபரை வளர்ப்பு நாய் கடித்து காயப்படுத்தினாலோ, அந்த நாயை வளர்க்கும் உரிமையாளர்களுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்படுகிறது.
இந்த சட்டத்தை திருத்தி, காயத்தை ஏற்படுத்திய நாய்களின் உரிமையாளருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டு சிறை தண்டனையும், உயிரிழப்பை ஏற்படுத்தும் நாய்களின் உரிமையாளருக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும் வழங்குவதை வகை செய்யும் புதிய சட்டத்தை இயற்ற இங்கிலாந்து அரசு பரிசீலித்து வருகிறது.
இதுதொடர்பாக அடுத்த மாதம் முதல் வாரத்தில் இறுதி முடிவு எட்டப்படும் என தெரிகிறது.
நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ செலவுக்கு மட்டும் இங்கிலாந்து அரசு ஆண்டுதோறும் 30 லட்சம் பவுண்டுகள் செலவிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.