தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 10 நிமிட பேச்சு: கடந்த ஆண்டு நடைபெற்ற இதே கூட்டத்தில் தமிழக அரசு அளித்த பரிந்துரைகளில் ஒன்றைக் கூட பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளவில்லை. இதன் மூலம் மாநில அரசுகளின் ஆலோசனைகள் புறக்கணிக்கப்படுவது உறுதியாகியுள்ளது.
வறுமையை ஒழிக்க பல்வேறு திட்டங்களை வகுக்கும் மத்திய அரசு, மக்களின் அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் விலையை பல மடங்கு உயர்த்துகிறது. இப்படி செய்தால் எவ்வாறு வறுமை ஒழியும்? மத்திய அரசின் பல்வேறு கொள்கைகளால், தமிழகம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் ஒவ்வொரு சிறு கோரிக்கைகளும், தேவைகளும் மத்திய அரசால் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நிலவும் பல்வேறு பிரச்னைகள் குறித்து பிரதமருக்கு கோரிக்கை வைத்தும், அதனை பல முறை நினைவுப்படுத்தியும், இதுவரை ஒரு பதில் கூட மத்திய அரசிடம் இருந்து தமிழகத்துக்கு அனுப்பப்படவில்லை.
தமிழகத்தில் நடைபெற வேண்டிய பல்வேறு கட்டமைப்புப் பணிகள், மத்திய அரசின் நிதியுதவி சரிவரக் கிடைக்காமல் காலதாமதம் ஆகின்றன. காவிரியில் இருந்து தண்ணீரை தமிழகத்துக்குக் கிடைக்க வகை செய்யும் பணியிலும், இலங்கை கடற்படையினரிடம் இருந்து தமிழக மீனவர்களைக் காக்கும் பணியிலும் மத்திய அரசு தோல்வியையே அடைந்துள்ளது. அரசு கேபிள் டிவியை, டிஜிட்டல் மயமாக்க எத்தனையோ முறை விண்ணப்பித்தும், மத்திய அரசு இதுவரை ஒரு பதிலும் அளிக்கவில்லை. இதற்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ளவர்களின் டிவி நெட்வொர்க் பயன்பெற வேண்டும் என்பதே காரணமாக உள்ளது.
எப்போதுமே வளர்ச்சி விகிதத்தை இரட்டை இலக்க எண்களில் நிர்ணயிக்க வலியுறுத்துவது வழக்கம். ஆனால் எப்போதையும் விட 9% இருந்து இந்த ஆண்டு 8.2% ஆக வளர்ச்சி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. நேரடி பணப் பரிமாற்ற திட்டம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைமுறைப்படுத்த இயலாது என்பதை மத்திய அரசு ஏற்க மறுக்கிறது. குறிப்பாக உணவுப் பொருள் மானியத்துக்கு இது ஏற்றதாக அமையாது. ஆதார் திட்டத்தில் உள்ள குறைபாடுகளால், அதன் லட்சியம் நிறைவேற வாய்ப்பில்லாமல் போய்விட்டது. இந்தியாவில் நதிநீர் பங்கீடு மிகப்பெரிய சவாலாக உள்ளது. எப்போதும் போலவே 12வது திட்ட ஆவணத்திலும் அதுபற்றிய ஒரு விவரமும் எடுத்துக் கொள்ளப்படவில்லை.
தமிழகத்தில் நிலவும் கடுமையான மின் பற்றாக்குறை குறித்து பல முறை பிரதமருக்கு கடிதம் எழுதியும், இதுவரை மத்திய அரசு சார்பில் நேர்மறையான பதில் இல்லை. எனவே, தமிழகத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கே அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்றார். ஜெயலலிதா பேசிய 10வது நிமிடத்தில் மணி அடிக்கப்பட்டு நிறுத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டால் அதிருப்தி அடைந்து வெளிநடப்பு செய்தார். மேலும் தாம் கொண்டு வந்த அறிக்கையை முழுவதும் படித்ததாக பதிவு செய்து கொள்ளுமாறு கூறிவிட்டு விருட்டென வெளியேறிவிட்டார் ஜெயலலிதா