மலேசியாவிலிருந்து இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட்டமை குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பு கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை மீள ஒருங்கிணைப்பதற்கு முயற்சித்ததாக குற்றம் சுமத்தி மூன்று இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை மலேசியா அண்மையில் இலங்கைக்கு நாடு கடத்தியிருந்தது. பிரச்சாரப் பணிகளுக்காக குறித்த சந்தேக நபர்கள் நிதி திரட்டியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர்களை நாடு கடத்தும் பணிகளை கால தாமதிக்குமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பின் அகதிகளுக்கான முகவர் நிறுவனம்; மலேசிய அரசாங்கத்திடம் கோரியிருந்தது. புகலிடக் கோரிக்கையாளர்களின் பாதுகாப்பு குறித்து மதிப்பீடு செய்ய சந்தர்ப்பம் அளிக்காது துரித கதியில் நாடு கடத்தப்பட்டுள்ளதாக முகவர் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. மலேசிய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை வருத்தமளிக்கும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.