யாழ்ப்பாணத்து பனம் வெல்லத்துக்கு தென்பகுதியிலும், புலம் பெயர் நாடுகளிலும் பெரும் கிராக்கி ஏற்பட்டுள்ளது எனவே பதநீர் உற்பத்தியை ஊக்குவித்து பனம்வெல்ல உற்பத்தியை ஆரம்பிக்கும் நடவடிக்கையை பனை அபிவிருத்தி சபை ஆரம்பித்துள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் பனை மரங்களில் பருவ கால கள் உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்கள் போத்தலில் கள் அடைக்கும் பணிகளையும், பதநீர் உற்பத்தியை ஊக்குவித்து பனம்வெல்ல உற்பத்தியையும்
ஆரம்பிக்கவுள்ளனர்.
போத்தலில் கள் அடைக்கும் பணிகள் மற்றும் வெல்ல உற்பத்தி என்பன மார்ச் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது. குடாநாட்டுப் பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுற வுச் சங்கங்களால் உற்பத்தி செய்யப்படும் போத்தல் கள் மற்றும்
பனம் வெல்லம் ஆகியவற்றை தென்பகுதி மக்கள் உட்பட புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்களும் கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டுவதால் சங்கங்கள் இம்முறை அதிக அளவில் உற்பத்தியை மேற்கொள்ளலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக தென்மராட்சி பிரதேச பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களுடன் தொடர்பு கொண்ட போது, ‘போத்தலில் அடைக்கப்படும் கள்ளுக்கு தென்பகுதியில் கிராக்கி காணப்படுகிறது. போத்தல் கள் அதிக அளவில் உற்பத்தி செய்தால் அங்கத்தவர்களும் சங்கங்களும் அதிக பயன் பெறமுடியும்.
ஆனால், உற்பத்தி செய்யப்படும் போத்தல் கள்ளுக்கு அரசால் விதிக்கப்படும் உற்பத்தி மற்றும் விற்பனை வரி அதிகம் என்பதால் கடந்த வருடங்களைப்போன்று மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே உற்பத்தி செய்ய உத்தேசித்துள்ளோம். உற்பத்தி செய்யப்படும் போத்தல் கள்ளின் மொத்த விவரம் வழங்கப்பட்டு அனைத்துக்கும் வரி செலுத்த வேண்டும்.
தவிர்க்க முடியாத காரணங்களால் உற்பத்தி செய்யப்பட்டவற்றில் ஒரு தொகுதி விற்பனை செய்யாவிடின் அதன் கொள்வனவுச் செலவு, போத்தலில் அடைக்கும் செலவு, வரி போன்றவற்றால் சங்கம் நட்டமடைய நேரிடும் என்ற அச்சம் சங்கங்களிடையே காணப்படுகிறது. எனவே மட்டுப்படுத்தப்பட்ட அளவு போத்தல் கள்ளை உற்பத்தி
செய்யவுள்ளோம்.
பனை வெல்லம் மற்றும் பனங் கற்காரம் ஆகியவற்றுக்குத் தென்பகுதி மற்றும் புலம்பெயர் நாடுகளில் பெரும் கிராக்கி காணப்படுவதால் அங்கத்தவர்கள் மூலம் பதநீர் உற்பத்தியை அதிகரித்து வெல்ல உற்பத்தியில் ஈடுபடவுள்ளோம்’ என அவர்கள் தெரிவித்தனர்.