பாகிஸ்தானில் பொலிசார் போன்று வேடமிட்டு சென்ற தீவிரவாதிகள், 300 கைதிகளை விடுவித்து சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள தேரா இஸ்மாயில் கான் என்ற பகுதியில் சிறைச்சாலை ஒன்று உள்ளது.
இதில் சுமார் 5000 கைதிகள் உள்ளனர், இவர்களில் 250 பேர் கொடூரமான தீவிரவாதிகள்.
இந்நிலையில் பொலிஸ் அதிகாரிகள் போன்று வேடமிட்டு வந்த 150 தீவிரவாதிகள், வெடிகுண்டுகளை வீசியுள்ளனர். இந்த தாக்குதலில் சிறையின் வெளிப்புற தடுப்புச்சுவர் தகர்க்கப்பட்டது.
இதனையடுத்து தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சிறைக்காவலர்களும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இருப்பினும் சிறையில் இருந்த 300 கைதிகளை தீவிரவாதிகள் விடுவித்து சென்றுள்ளனர்.
இத்தாக்குதலுக்கு தெஹ்ரிக் இ தாலிபன் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்பின் தகவல் தொடர்பு அதிகாரி ஷாஹிதுல்லா ஷாஹித், தற்கொலை படையினர் 300 சென்றதாகவும், 300 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இத்தகவலை சிறைத்துறையின் ஆலாசகர் மாலிக் காசிம் கட்டாக் உறுதி செய்துள்ளார்.
மேலும், இத்தாக்குதலில் ஏராளமான கைதிகளும், நான்கு சிறைக்காவலர்களும், இரண்டு போராளிகளும் இறந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தாக்குதலுக்கு முன்னதாகவே, தீவிரவாதிகள் டிரான்ஸ்பார்மர்களை வெடிகுண்டு வீசித் தகர்த்து சிறையை இருட்டாக்கியதும், பொலிசார் தங்களை துரத்தாமல் இருக்க வாகனங்களை சேதப்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.