இராக்கில் வேலைக்காகச் சென்று, உள்நாட்டுப் போரால் சிக்கித் தவித்த புதுவையைச் சேர்ந்த இளைஞர் மத்திய அரசால் மீட்கப்பட்டு புதன்கிழமை வீடு திரும்பினார்.
புதுவை பெரியார் நகர் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்தவர் ஷியாபுதீன் (35). கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி இராக் சென்ற அவர், குருதீஸ்தான் பகுதியில் உள்ள எக்ஸ்பெர்ஸ் என்ற தனியார் நிறுவனத்தில், பராமரிப்புப் பிரிவில் பணியாற்றி வந்தார்.
அங்கு உள்நாட்டுப் போர் மூண்டதால், அந்த நிறுவனம் மூடப்பட்டது. இதனால் வேலையின்றியும், அங்கிருந்து வெளியே செல்ல வழியின்றியும் அவர் தவித்து வந்தார்.
ஷியாபுதீனை மீட்கக் கோரி அவரது மனைவி மரியம்பி, தனது 2 பிள்ளைகளோடு வந்து, கடந்த ஜூன் 23-ஆம் தேதி புதுவை முதல்வர் ரங்கசாமியிடம் மனு அளித்தார்.
இந்நிலையில், மாநில அரசின் அறிவுறுத்தலின் பேரில், மத்திய வெளியுறவுத் துறையின் முயற்சியின் காரணமாக, புதுவையைச் சேர்ந்த ஷியாபுதீனும் தமிழகத்தைச் சேர்ந்த சிலரும், இராக்கிலிருந்து புதன்கிழமை தாயகம் திரும்பினர்.
காலையில் சென்னை விமான நிலையம் வந்த ஷியாபுதீன், அங்கிருந்து பேருந்தில் புதுவைக்கு வந்து சேர்ந்தார். அவரை மனைவி மரியம்பி மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர்.
ஷியாபுதீனை மீட்க உதவிய மத்திய, மாநில அரசுகளுக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர். இதனையடுத்து, முதல்வர் ரங்கசாமியை சந்தித்து, ஷியாபுதீன் நன்றி தெரிவித்தார். மேலும், இராக்கில் தான் பணியாற்றிய நிறுவனத்தில் முடங்கியுள்ள பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை மீட்டுத் தர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.