பிரித்தானிய நாட்டில் சிறிய ரக விமானத்தில் பயணம் செய்தபோது ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
இங்கிலாந்தில் உள்ள சர்ரே பகுதியில் வசித்து வந்த ஒரு குடும்பத்தினர், நேற்று சிறிய ரக விமானம் ஒன்றில் பயணம்
செய்துள்ளனர்.
குடும்பத்தினர் வசித்த பகுதியில் இருந்து சில மைல்கள் தொலைவில் உள்ள Dunkeswell Aerodrome என்ற கிராமத்திற்கு விமானம் பறந்து சென்றுள்ளது.
ஆனால், 4 மைல்கள் தொலைவிற்கு விமானம் பயணமானபோது அதில் திடீர் கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
விமானியின் கட்டுப்பாட்டை இழந்த அந்த சிறிய ரக விமானம் அதிவேகமாக தரையை நோக்கி பாய்ந்து விழுந்து நொறுங்கியுள்ளது.
இந்த விபத்தில், விமானத்தில் பயணம் செய்த 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
விமான விபத்து தொடர்பாக ரிச்சார்ட் கோரிகன் என்ற பொலிசார் இன்று தகவல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், விபத்தில் 56 மற்றும் 20 வயதுடைய 2 ஆண்களும், 55 மற்றும் 23 வயதுடைய 2 பெண்களும் உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் நால்வரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில்
தெரியவந்துள்ளது.
எனினும், விமானம் எதனால் விபத்துக்குள்ளானது என்பது தொடர்பாக வான்வெளி போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதால், அதன் முடிவுகள் வெளியான பின்னர் அனைத்து தகவல்கள் முழுமையாக தெரியவரும் என பொலிசார்
தெரிவித்துள்ளார்.