உலகிலேயே முதல் முறையாக தாய்லாந்தில் செயற்கை கால் பொருத்தப்பட்ட பெண் யானை சராசரி பணிகளை வழக்கம்போல் செய்து பார்வையாளர்களை அசத்தி வருகிறது. கம்போடியா எல்லையோரம் உள்ள வனப்பகுதியில் புதைத்து வைக்கப்படிருந்த கண்ணி வெடியில் சிக்கி ஒரு காலை பறி கொடுத்த மோஷா என்ற அந்த பெண் யானைக்கு தாய்லாந்தில் உள்ள ஆசியா யானைகள் மருத்துவமனயில் கடந்த 2007-ம் ஆண்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
மற்ற யானைகளைப் போல் இல்லாமல் மூன்று கால்களுடன் ஊனமாகி விட்டதை எண்ணி கண்ணீர் வடித்த மோஷா, பல நாட்கள் சாப்பிட மறுத்து சோர்ந்து போய் காணப்பட்டது. பிளாஸ்டிக், மரத்தூள் மற்றும் உலோகங்கள் சேர்ந்த கலவையால் மனிதர்களுக்கு பொருத்தும் செயற்கை கால்களைப் போலவே மோஷாவுக்கும் ஒரு செயற்கை காலை
டாக்டர்கள் தயாரித்தனர்.
தற்போது, அந்த காலின் உதவியுடன் தனது வழக்கமான பணிகளை உற்சாகமாக செய்யும் மோஷாவை கவனித்து வரும் பாகன், அது தூங்கும்போது மட்டும் செயற்கை காலை கழற்றி வைத்து விடுகிறார். புதிய கால் கிடைத்தவுடன் புதிய வாழ்க்கையே
கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் இப்போதெல்லாம் சுமார் 150 கிலோ உணவு வகைகளை சாப்பிடுகின்றது. சமீபத்தில் பழைய செயற்கை காலுக்கு பதிலாக புதிதாக மற்றொரு செயற்கை காலை பொருத்திக் கொண்ட மோஷா, இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் நடமாடி வருவதாக பாகன் கூறுகிறார்.