வட கொரியாவில் 3 நாட்களில் மட்டும் 8,20,620 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.உலகையே ஆட்டிப்படைத்துவரும் கொரோனா வைரஸ் பல நாடுகளில் கடும் பாதிப்பை
ஏற்படுத்தின. ஆனால் இரும்புத்திரை நாடாக வர்ணிக்கப்படும் வடகொரியாவில் எந்த பாதிப்பு ஏற்படாமல் இருந்தது. வட கொரியாவில் யாருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதாக பதிவு செய்யப்படவில்லை என உலக சுகாதார நிறுவனம் கூறியது.
ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகள் கிடைப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட கோவேக்ஸ் திட்டத்தின் கீழ் சீனா தயாரித்த சினோவாக் தடுப்பூசிகள் வடகொரியாவுக்கு வழங்கப்பட்டன. இதனால் சீனா தங்களுக்கு வழங்கிய சுமார் 30 லட்சம் எண்ணிக்கையிலான கொரோனா தடுப்பூசிகளை
வேறு நாட்டுக்கு திருப்பி அனுப்பிவிடுமாறு
வடகொரியா கேட்டுக் கொண்டது.யாருக்குமே கொரோனா இல்லாததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என வடகொரியா அதிபர் கிம்
ஜாங் உன் அறிவித்தார்.
இந்நிலையில் எளிதில் பரவக் கூடிய ஒமைக்ரோன் வகை கொரோனா தொற்று காரணமாக வட கொரியாவில் முதல் கொவிட் -19 பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனையடுத்து நாடு முழுவதும் அவசரநிலை அறிவிக்கப்பட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு
வருகின்றது.
சீனாவுடனான வர்த்தக உறவினால் இந்த கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று முதலில் கூறப்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் நடந்த பிரமாண்ட இராணுவ அணிவகுப்பின் மூலமாகவே கொரோனா பரவியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கொரோனா காரணமாக இதுவரை சுமார் 10 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை 1,74,440 பேருக்கு காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் இதுவரை 21 பேர் பலியாகியுள்ளனர். இந்தநிலையில் 3 நாட்களில் மட்டும் 820,620 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதில் 3.2 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். ஞாயிறன்று காய்ச்சலால் 15 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டின் அனைத்து மாகாணங்கள், நகரங்கள் மற்றும் மாவட்டங்கள் முற்றிலுமாக ஊரடங்கில் உள்ளன. அலுவலகங்கள், உற்பத்தி அலகுகள் மற்றும் குடியிருப்புகள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத வகையில் தடுக்கப்பட்டுள்ளன. நோய் பரவுவதை தடுக்க அவசரகால அதிகபட்ச தனிமைப்படுத்தல் அமைப்பு செயல்படுத்தப்பட்டுள்ளது.