காணாமல் போன பொருட்களை ஓரிரு வினாடிகளிலேயே கண்டுபிடித்துக் கொடுக்கும், நவீன சென்சார் கருவியை, ஜெர்மன் நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஜெர்மனியின், உல்ம் பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் வடிவமைக்கப்பட்டுள்ள, இந்த நவீன கருவியை, "ஸ்மார்ட் போன்' அல்லது கம்ப்யூட்டருடன் இணைத்து அதிலுள்ள தேடுதல் மூலம் காணாமல் போன பொருட்களை, எளிதாக கண்டுபிடித்துவிடலாம்.
"பைண்டு மை ஸ்டப்' என்று அழைக்கப்படும், இந்தக் கருவியின் உதவியுடன், நாம் எதை தொலைத்து விட்டோமோ அதன் பெயரை கணனி திரையில் தட்டச்சு செய்ய வேண்டும்.
அதாவது, மணி பர்ஸ் அல்லது சாவிக்கொத்து போன்றவற்றின் பெயரை கணனி திரையில் தட்டச்சு செய்தால், ஓரிரு வினாடிக்குள்ளேயே, உங்களது, மணிபர்ஸ் அல்லது சாவிக் கொத்து, சோபா சீட்டின் அடியில் உள்ளது அல்லது அருகில் உள்ளது என்று நமக்கு தகவல் தெரிவிக்கும்.
இதுகுறித்து, இந்த கருவியை வடிவமைத்த, விஞ்ஞானி, புளோரியா சாப் கூறியதாவது:
இக்கருவியில் பயன்படுத்தப்பட்டுள்ள சென்சார் கருவி, டிரான்ஸ்மிட்டர்கள் மற்றும் சிப்ஸ் ஆகியவை, மிகவும் சிறியவை மட்டுமின்றி, இதன் விலையும் மிகவும் குறைவு.
மிகச்சிறிய நெட்வொர்க் மூலம் செயல்படுத்தப்படும், இக்கருவியைக் கொண்டு, நாம் தேடும் பொருளை சிரமமின்றி கண்டுபிடித்துவிடலாம்.
இன்றைய நவீன உலகில் கணனியின் உதவியுடன் நாம் எதனுடனும் தொடர்பு வைத்துக் கொள்ள முடியும். அந்த வகையில், "பைண்டு மை ஸ்டப்' கருவியை, கணனி அல்லது ஸ்மார்ட் போனில் இணைத்து, நெட்வொர்க் மூலம், நாம் தேடும் பொருட்களை கண்டுபிடிக்கலாம்.
தொலைபேசி தயாரிப்பாளர்கள், இந்த கருவியை தாங்கள் தயாரிக்கும் போனிலும் பொருத்தலாம். அடுத்த மாதம், இக்கருவி சந்தைக்கு வருகிறது