சிரியா மற்றும் ஈராக்கில் அரசுப் படைகளை எதிர்த்து தாக்குதல் நடத்தி வரும் போராளிகள் ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்கள். ஐ.எஸ்.ஐ.எஸ். என்பது �இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் அன்ட் சிரியா� என்ற ஆங்கில வார்த்தையின் சுருக்கம் ஆகும். ஈராக்கையும், சிரியாவின் ஒரு பகுதி மற்றும் துருக்கியின் ஒரு பகுதி ஆகியவற்றையும் இணைத்து தனி இஸ்லாமிய நாட்டை உருவாக்குவது இவர்களது திட்டமாகும். இதுமட்டுமல்லாமல் எதிர்காலத்தில் பக்கத்து நாடான லெபனான், பாலஸ்தீனம், இஸ்ரேல், ஜோர்டான், துருக்கி ஆகிய நாடுகளையும் ஒன்றிணைத்து பெரிய அளவிலான இஸ்லாமிய தேசத்தை உருவாக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இதன் முதல்கட்டமாக சிரியாவின் எல்லையோரம் உள்ள ஈராக்கின் மொசூல் நகரை கைப்பற்றிய இப்படையினர் அங்கிருக்கும் கிருஸ்தவர்கள், யாஸிதிகள் மற்றும் குர்த் இன மக்களை ஊரை விட்டு அடித்து விரட்டி விட்டு இஸ்லாமிய அரசை அமைத்துள்ளதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில், சிரியாவின் ரக்கா நகரை ஏற்கனவே கைப்பற்றி தங்களது தலைமை பீடமாக அமைத்துக் கொண்டுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள் வடக்கு மற்றும் கிழக்கு சிரியாவின் பல பகுதிகளையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
இதன் அடுத்தகட்டமாக, அலெப்போ மாகாணத்தில் இருந்து வடகிழக்கே சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள டர்க்மென், பரே, அக்தரின் ஆகிய நகரங்களையும் அவற்றை ஒட்டியுள்ள சில கிராமங்களையும் அவர்கள் கைப்பற்றியுள்ளனர். ஐ.எஸ்.ஐ.எஸ். என்றிருந்த தங்களது இயக்கத்தின் பெயரை ஐ.எஸ். என்று சமீபத்தில் சுருக்கிக் கொண்ட இவர்களது படையில் இணைய பலரும் முயன்று வருவதாக தெரிகின்றது.
இந்த ஐ.எஸ்.படையில் அமெரிக்கா, பிரிட்டைன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளை சேர்ந்த இஸ்லாமிய இளைஞர்களும் சேர்ந்து சிரியா மற்றும் ஈராக் ராணுவத்தினருடன் போரிட்டு வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்தியாவை சேர்ந்த சுமார் 100 இஸ்லாமிய இளைஞர்களும் இந்தப் படையில் சமீபத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. பிரிட்டைனை சேர்ந்த சுமார் 600 இஸ்லாமிய இளைஞர்கள் ஐ.எஸ்.படையில் இணைந்து சிரியா மற்றும் ஈராக்கில் போராடி வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
புதிதாக இந்த இயக்கத்தில் இணையும் இளைஞர்களுக்கு பிரிட்டிஷ் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரிகள் நவீன வகை போர்ப் பயிற்சிகளை அளித்து வரும் திடுக்கிடும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் செல்போன் உரையாடல் மற்றும் இ-மெயில்களை பிரிட்டைன் நாட்டின் உளவுத்துறையான எம்.16 மற்றும் அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ. ஆகியவை இடைமறித்து உளவறிந்ததில் மேற்கண்ட உண்மை தெரியவந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகமான !தி டெய்லி ஸ்டார்! குறிப்பிட்டுள்ளது.