லண்டனில் இருந்து கொழும்பு நோக்கி நேற்று முன்தினம் (13-06-2022) பயணத்தை மேற்கொண்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் யு.எல் 504 என்ற விமானம் நடுவானில் ஏற்படவிருந்த பாரிய விபத்தை தவிர்த்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நேற்று பிற்பகல் குறித்த விமானம் பாதுகாப்பாக இலங்கைவந்து தரையிறங்கியது. இந்த விமானம், 275 பயணிகளுடன் லண்டனிலிருந்து கட்டுநாயக்க நோக்கி பயணத்தை ஆரம்பித்தது.சுமார் 33,000 அடி உயரத்தில் குறித்த பறந்துகொண்டிருந்தபோது, பிரிட்டிஷ் எயார்வேய்ஸூக்கு சொந்தமான விமானம் ஒன்று 35,000 அடி உயரத்தில்
பறந்துகொண்டிருந்தது.
துருக்கி வான்வெளியில் 33,000 அடியில் இருந்து 35,000 அடி உயரத்திற்கு பயணிக்குமாறு துருக்கி – அங்காரா விமானக் கட்டுப்பாடு அறையில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானிக்கு அறிவுறுத்தப்பட்டது.
விழிப்புடன் இருந்த ஸ்ரீலங்கன் விமானி, பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானமொன்று 35,000 அடி உயரத்தில் தமது விமானத்திலிருந்து 15 மைல் தொலைவில் பயணிப்பதை கண்டறிந்து, அங்காராவில் உள்ள விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வழங்கினார்.
யு.எல் 504 விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் நோக்கிச் குறித்த பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் விமானம் புறப்பட்டிருந்தது. இந்நிலையில், ஸ்ரீலங்கன் விமானி வழங்கிய தகவலை சரிபார்த்த போது, அங்காரா விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறை, யு.எல் விமானியிடம் 35,000 அடி உயரத்தில் எந்த விமானத்தையும் தாங்கள் ரேடாரில் கண்டறியவில்லை என்று தெரிவித்ததுடன், ஸ்ரீலங்கன் விமானம் மேல் நோக்கி பயணிக்க பணிக்கப்பட்டது.
எனினும், பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தை தமது விமானத்தின் ரேடாரில் கண்டறிந்த ஸ்ரீலங்கன் விமானி, மீண்டும் அங்காரா விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு பிரிவினருக்கு தகவல் கொடுத்தார்.சில நிமிடங்களுக்குப் பிறகு 35,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த பிரிட்டிஷ் விமானத்தை ரேடாரில் கண்டறிந்த கட்டுப்பாட்டு பிரிவு, ஸ்ரீலங்கன் விமானத்தை மேலே பயணிக்க வேண்டாம் என்று அவசரமாக பணித்தது.
ஸ்ரீலங்கன் விமானம் பணிக்கப்பட்ட உயரத்தில் பயணித்திருந்தால், பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் விமானத்துடன் மோதி பாரிய அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும் இந்த சம்பவம் குறித்து அறிக்கையொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யு.எல் 504 விமானத்தில் இருந்த 275 பயணிகள், அதன் பணியாளர்கள் மற்றும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் அதன் பணியாளர்களின் உயிர்கள், யு.எல் விமானத்தின் தலைமை விமானியின் விழிப்புணர்வு மற்றும் சாமர்த்தியமான தீர்மானத்தின் காரணமாக காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இச்சம்பவம் தொடர்பில் அறிக்கையொன்றை விடுத்துள்ள ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ், UL 504 விமான மற்றொரு விமானத்துடன் மோதும் அபாயத்தை ஏற்படுத்தவில்லை என்பதை தாம் வலியுறுத்த விரும்புவதாக தெரிவித்துள்ளது.அத்துடன், தமது விமானிகளின் புத்திசாலித்தனமும், விமானத்தின் அதிநவீன தகவல் தொடர்பு அமைப்பும் விமானம் பாதுகாப்பாக பறக்க உதவியது என்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்
தெரிவித்துள்ளது.