ஒலிம்பிக் போட்டிக்கு பின், கிரிக்கெட் அல்லது கால்பந்து போட்டிகளில் விளையாடுவது குறித்து உசைன் போல்ட் முடிவு செய்ய உள்ளார்.
ஜமைக்காவின் "மின்னல் வேக' வீரர் உசைன் போல்ட், 26. கடந்த 2008ல் நடந்த பீஜிங் ஒலிம்பிக் 100, 200 மற்றும் 4*100 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்ற இவர், சமீபத்தில் முடிந்த லண்டன் ஒலிம்பிக் போட்டியிலும் தங்கம் வென்று சாதித்தார்.
தடகளப் போட்டியில் அசத்தி வரும் இவர், கிரிக்கெட் அரங்கில் காலடி வைக்கப் போவதாக செய்திகள் வெளியாகின. இதனை உறுதிப்படுத்தும் விதமாக ஆஸ்திரேலியாவில் நடக்கும் "பிக் பாஷ்' டுவென்டி-20' தொடரில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி இவரை ஒப்பந்தம் செய்ய போவதாக கூறப்பட்டது. இதற்காக சமீபத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி கேப்டன் ஷேன் வார்னுடன், போல்ட் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதற்கு பின் கால்பந்து விளையாட ஆர்வமாக இருப்பதாக திடீரென கூறினார். இதனால் உசைன் போல்ட், கிரிக்கெட் விளையாடுவாரா அல்லது கால்பந்து போட்டிகளில் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்தது
இதுகுறித்து உசைன் போல்ட் ஏஜன்ட் ரிக்கி சிம்ஸ் கூறுகையில், ""உசைன் போல்ட் தற்போது தடகளப் போட்டியின் மீது மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இவர், அடுத்த ஆண்டு மாஸ்கோவில் நடக்கவுள்ள உலக தடகள சாம்பியன்ஷிப் தொடருக்காக பயிற்சி மேற்கொண்டுள்ளார். தடகளப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின் தான் கிரிக்கெட் அல்லது கால்பந்து போட்டிகளில் விளையாடுவது குறித்து முடிவு செய்வார். அதாவது வரும் 2016ல் பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோ நகரில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு பின் முடிவு செய்வார்,'' என்றார
மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் மீடியா மானேஜர் ஜெஸ் குக் கூறுகையில், ""பிக் பாஷ் தொடரில் போல்ட் விளையாட, கடந்த இரண்டு மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனால் இவர் உலக தடகள சாம்பியன்ஷிப் தொடருக்காக பயிற்சி மேற்கொண்டு வருவதால், இம்முறை பங்கேற்க வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. அடுத்த தொடரில் பங்கேற்பது குறித்து விரைவில் பேச்சு வார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளோம்,'' என்றார்.