12.08.2012.கொழும்பு, ஆக. 10: விடுதலைப் புலிகளை தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் நிராகரித்துவிட்டனர் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கொழும்பில் நடைபெற்ற கருத்தரங்கில் தெரிவித்தார்.
கொழும்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ராணுவம் தொடர்பான சர்வதேச கருத்தரங்கில் சுப்பிரமணியன் சுவாமி பேசியதாவது:÷இலங்கையில் தீவிரவாதத்தை ஒழித்த பெருமை அதிபர் ராஜபட்சவையே சாரும். இதை தங்களின் தேசியப் பாதுகாப்புக்கு உகந்த நடவடிக்கையாக இந்தியர்கள் பார்க்கின்றனர். ராஜபட்சவின் வெற்றியின் மூலம் அதிகம் பயனடையப் போவது இந்தியாதான். ராஜபட்சவின் செயலுக்குண்டான வெகுமதியாக அவருக்கு எதிர்காலத்தில் உயரிய விருது கிடைக்கும்.
போரை நிறுத்தும்படி உலக நாடுகள் எல்லாம் கோரிக்கை விடுத்த நிலையிலும், அதை ஏற்காமல் தீவிரவாதத்தை முற்றிலும் அழிப்பதற்கான ராணுவ நடவடிக்கைகளில் அதிபர் ராஜபட்ச உறுதியாக இருந்தார். இது சரியான நடவடிக்கை. போர் முடிவுக்கு வந்த பின், இலங்கையில் பல்வேறு துறைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளை தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் நிராகரித்துவிட்டனர். அந்த அமைப்புக்கு ஆதரவான போராட்டம் தொடர்பான அழைப்பை தமிழர்கள் ஏற்கவில்லை. இதை இந்தியன் என்ற முறையிலும், தமிழன் என்ற முறையிலும் தெரிவித்துக்கொள்கிறேன்.
மனித உரிமை மீறல் தொடர்பாக இலங்கை அரசுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்திய அரசு ஆதரித்தது. இந்திய அரசின் இச்செயலை பெரும்பான்மையான இந்தியர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.
இலங்கையில் தாங்கள் ஒதுக்கப்படுகிறோம் என்ற மனநிலையிலிருந்து விடுபட்டு தேசத்தை கட்டமைக்கும் பணியில் தமிழர்களும் பங்குபெற வேண்டும் என இந்தியா விரும்புகிறது. அதற்கேற்ற சூழ்நிலையை ஏற்படுத்தும் வகையில் நல்லிணக்க நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டும்.
பெரும்பான்மை சிங்களர்களின் அரவணைப்பின்கீழ் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு என்பதையே நாங்கள் வலியுறுத்துகிறோம் என்றார்.
அதிபருடன் சந்திப்பு: முன்னதாக இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்சவை சுப்பிரமணியன் சுவாமி வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது இலங்கையின் இனப் பிரச்னை குறித்தும், தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்குவது குறித்தும் அவர் பேசியதாகக் கூறப்படுகிறது.
ராஜபட்சவை சந்தித்த பின் சுப்பிரமணியன் சுவாமி செய்தியாளர்களிடம் கூறியது:÷இலங்கை அரசு அமைத்துள்ள நாடாளுமன்ற தேர்வுக்குழு மூலம் நல்லிணக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதிபர் ராஜபட்ச விரும்புகிறார்.
இது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டணியில் இல்லாத கட்சிகளை ஒருங்கிணைக்கும் அவசியம் குறித்து அதிபரிடம் எடுத்துரைத்தேன். இலங்கையில் காவல் துறையை நிர்வகிக்கும் அதிகாரத்தை தமிழர்களுக்கு வழங்குவதற்கு அரசு அச்சப்படுகிறது. இதுபோன்று அதிகாரத்தை பரவலாக்கினாலும், தவறாகப் பயன்படுத்தும்பட்சத்தில், அதைத் தடுக்க உரிய கண்காணிப்பு அமைப்புகளை அரசு அமைக்கலாம்.
இந்தியாவில் அரசமைப்புச் சட்டம் 356-ன்படி சட்டத்துக்கு எதிரான சூழ்நிலை நிலவும் மாநிலங்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்பதை ராஜபட்சவின் கவனத்துக்குக் கொண்டு வந்தேன்.
இலங்கையில் தீவிரவாதத்தை ஒழித்தப்பின், அங்கு நேர்மறையான நடவடிக்கைகளின் மூலம் தமிழர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது அரசின் கடமை என்பதை அதிபரிடம் வலியுறுத்தினேன்'' என்றார்