நைஜீரியாவில் நடந்த அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் முகமது புகாரி அபார வெற்றி பெற்றார்.
அதிபர் தேர்தல்
ஆப்பிரிக்க நாடான நைஜீரியா, போகோ ஹரம் தீவிரவாதிகளின் ஆதிக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட மத அரசை நிறுவுவதற்காக ஆயுதம் ஏந்தி போராடி வருகிற அவர்கள், ஆயிரக்கணக்கான மக்களின் உயிரை பறித்துள்ளனர். அவர்களை தற்போதைய அதிபர் குட்லக் ஜோனத்தானால் கட்டுப்படுத்த முடியவில்லை என்று விமர்சனங்கள் எழுந்தன.
இந்த நிலையில் அங்கு கடந்த 28–ந் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் குட்லக் ஜோனத்தானுக்கும் (வயது 57), எதிர்க்கட்சி (அனைத்து முற்போக்கு காங்கிரஸ்) வேட்பாளர் முகமது புகாரிக்கும் (72) இடையே பலத்த போட்டி நிலவியது.
எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி
இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் கடந்த 2 தினங்களாக எண்ணப்பட்டு வந்தன. நேற்று தேர்தல் முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
தற்போதைய அதிபர் குட்லக் ஜோனத்தான் தோல்வியை தழுவினார். எதிர்க்கட்சி வேட்பாளர் முகமது புகாரி அபார வெற்றி பெற்றார். முகமது புகாரிக்கு 1 கோடியே 54 லட்சத்து 24 ஆயிரத்து 921 ஓட்டுகள் கிடைத்தன. குட்லக் ஜோனத்தான் 1 கோடியே 28 லட்சத்து 53 ஆயிரத்து 162 ஓட்டுகளை பெற்றார்.
முதல் முறை
நைஜீரியாவில் ஜனநாயக ரீதியில் தேர்தல் நடந்து, அதில் எதிர்க்கட்சி வேட்பாளர் ஒருவர் வெற்றி பெற்று அதிபர் பதவிக்கு வருவது இதுவே முதல் முறை என்பது முக்கிய அம்சம்.
இப்போது வெற்றி பெற்றுள்ள முகமது புகாரி, 1984, 1985–ம் ஆண்டுகளில் அந்த நாட்டின் ராணுவ ஆட்சியாளராக திகழ்ந்தவர். போகோ ஹரம் தீவிரவாதிகளின் கொலை முயற்சியில் தப்பியவர். அந்த தீவிரவாதிகளை ஒடுக்குவதற்கு இவர்தான் ஏற்றவர் என்றே மக்கள் பெருவாரியாக இவருக்கு வாக்களித்து இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
ஜோனத்தானுக்கு பாராட்டு
இந்த தேர்தலில் அதிபர் குட்லக் ஜோனத்தான் தன் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார். தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், நாட்டு மக்களுக்கு அவர் டெலிவிஷனில் உரை ஆற்றினார். அப்போது அவர், ‘‘நேர்மையான, சுதந்திரமான முறையில் அதிபர் தேர்தல் நடத்தப்படும் என வாக்குறுதி அளித்தேன். நான் சொன்னதை நிறைவேற்றி விட்டேன்’’ என கூறினார்.
தேர்தலில் வெற்றி பெற்றுள்ள முகமது புகாரி, ‘‘அதிபர் ஜோனத்தான் என் மதிப்புக்குரிய போட்டியாளர். அவருடன் கரம் கோர்க்கிறேன்’’என புகழாரம் சூட்டினார். மேலும், ‘‘ ஜனநாயகத்தை தழுவியுள்ள மக்கள் நாங்கள் என்று, உலகுக்கு நாங்கள் இருவரும் காட்டியுள்ளோம்’’
என்றும் கூறினார்.
தற்போதைய அதிபர் குட்லக் ஜோனத்தான், புதிய அதிபர் முகமது புகாரியிடம் அடுத்த மாதம் 29–ந் தேதி முறைப்படி அதிகாரத்தை ஒப்படைப்பார் என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.