ஆப்கானில் அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் பாகிஸ்தான் தலீபான் தளபதி சஜ்னா கொல்லப்பட்டார். அவருடன் மேலும் 12 தீவிரவாதிகள் பலியாகினர்.
தலீபான் தளபதி சஜ்னா
பாகிஸ்தான் தலீபான் தீவிரவாத இயக்கத்தின் தளபதி கான் சயீத் சஜ்னா. இவர் கடந்த ஆண்டு பாகிஸ்தான் தலீபான் இயக்கத்தின் மத்திய தலைவர் முல்லா பஸ்லுல்லாவை நிராகரித்துவிட்டு தான் தனது குழுவுடன் தனியாக இயங்கப்போவதாக அறிவித்தார்.
முல்லா பஸ்லுல்லாவின் தலைமை தனக்குரிய ‘பாதையை’ இழந்து விட்டதாக கூறி சஜ்னா பிரிந்து வந்தார்.
ஆளில்லா விமான தாக்குதல்
இந்த நிலையில், நேற்று முன்தினம் ஆப்கானிஸ்தானில் கோஸ்ட் மாகாணத்தில், தம்மா பகுதியில் உள்ள ஒரு இடத்தில் பல்வேறு குழுக்களாக இயங்கி வந்த தலீபான் அமைப்புகள் இடையே உள்ள கருத்து வேறுபாடுகளை களைவது தொடர்பாக சமரச பேச்சு வார்த்தை நடந்ததாக
கூறப்படுகிறது.
அப்போது அங்கு அமெரிக்காவின் ஆளில்லா விமானம் குண்டு வீச்சு நடத்தியது.
கொல்லப்பட்டார் சஜ்னா
இந்த குண்டு வீச்சில் சஜ்னாவும், மேலும் 12 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டு விட்டதாக தகவல்கள் கூறுகின்றன. 20 தீவிரவாதிகள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும்
கூறுகின்றன.
இதுதொடர்பாக அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ‘நியூயார்க் டைம்ஸ்’ நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
பாக். உளவு அதிகாரி உறுதி செய்தார்
ஆளில்லா விமான தாக்குதலில் சஜ்னா கொல்லப்பட்டு விட்டதை பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரி ஒருவர் உறுதி செய்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அமெரிக்க அதிகாரிகள் இது குறித்து எதுவும் தகவல் வெளியிடவில்லை.
அதே நேரத்தில் சஜ்னா தலைமை தாங்கி வந்த தலீபான் தீவிரவாதிகள் குழு இந்த தகவலை மறுக்கவில்லை.
மிகப்பெரிய அடி
சஜ்னா தொடர்பாக பெஷாவர் ராணுவ அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘பாகிஸ்தான் தலீபான் இயக்கத்தின் தளபதியாக திகழ்ந்து வந்த சஜ்னாவை நீண்ட காலமாக பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு படைகள் பின்தொடர்ந்து வந்தன’’ என குறிப்பிட்டார்.
‘‘சஜ்னா, அமெரிக்காவின் ஆளில்லா விமான தாக்குதலில் கொல்லப்பட்டது உண்மை என்றால், அது பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாத இயக்கத்துக்கு விழுந்துள்ள மிகப்பெரிய அடியாக அமையும்’’ என பாகிஸ்தான் தலீபான் இயக்கத்தின் மற்றொரு
தளபதி கூறி உள்ளார்.
2 தினங்களுக்கு முன் ஆப்கானில், குனார் மாகாணத்தில், காஜி மாவட்டத்தில் அமெரிக்கா நடத்திய மற்றொரு ஆளில்லா விமான தாக்குதலில் அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தளபதி பிலால் அல் தாயிப் கொல்லப்பட்டது நினைவுகூரத்தக்கது.