விடுமுறை காலப்பகுதியில் பிரான்சில் இருந்து இலங்கை வந்த 10 வயதான சிறுவன் பிரான்ஸ் - லியோனில் பகுதியில் வைத்து உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுவன் இலங்கைக்கு வந்திருந்த காலப்பகுதியில் திக்வெல கடற்கரையில் வைத்து வெறி நாய் கடித்துள்ளது. இதனை சிறுவனின் பெற்றோர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
இந்நிலையில், நாடு திரும்பிய குறித்த சிறுவன் நோய்வாய்ப்பட்டதை அடுத்து கடந்த 4ஆம் திகதி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனையடுத்து, சிறுவனின் இரத்த மாதிரியை சோதனை செய்த பஸ்தர் நிறுவனம், குறித்த சிறுவனுக்கு வெறிநாய் கடித்து ரேபிஸ் நோய் தொற்று ஏற்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியது.
மேலும், குறித்த சிறுவன் மூலம் பிரான்ஸ் நாட்டிற்குள் ரேபிஸ் நோய் (விசர்நாய் நோய்) பிரான்சிற்குள் வந்திருப்பதை தேசியக் குறிப்பு மையமான CNR (entre national de référence) உறுதிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், குறித்த சிறுவன் சிகிச்சை பலன் இன்றி நேற்று உயிரிழந்துள்ளார். மேலும், சிறுவனுக்கு ஏற்பட்டுள்ள நோய் தொற்று தொடர்பில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சக மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் மேலும்
தெரிவித்துள்ளன.