எல்லைப் பகுதியில் அமைதியை பராமரித்தல், புதிய எல்லை பாதுகாப்புத் திட்டம் உள்பட பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் குறித்து சீன ராணுவத் தளபதியுடன் இந்திய ராணுவ தலைமைத் தளபதி விக்ரம் சிங் ஆலோசனை நடத்தினார்.
கடந்த 9 ஆண்டுகளில் சீனாவுக்கு சென்றுள்ள முதல் இந்திய ராணுவ தலைமைத் தளபதியான ஜெனரல் விக்ரம் சிங், அந்நாட்டு ராணுவ தலைமைத் தளபதி ஃபாங் ஃபெங்குயியை பெய்ஜிங்கில் புதன்கிழமை சந்தித்துப் பேசினார்.India_china
இந்தச் சந்திப்பின்போது இருநாட்டு ராணுவத்தினரிடையேயான கூட்டுப் பயிற்சிகளை அதிகரித்தல், கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட எல்லை பாதுகாப்பு கூட்டு ஒப்பந்தம் உள்பட உயர்நிலை அதிகாரிகளிடையிலான தகவல் பரிமாற்றங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக இந்திய தரப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, பெய்ஜிங் சென்றடைந்த விக்ரம் சிங்கை வரவேற்று ஃபாங் ஃபெங்குயி கூறுகையில், “இந்தியாவில் புதிய அரசு பதவியேற்றபிறகு முதன்முறையாக வந்துள்ள உங்கள் தலைமையிலான மூத்த ராணுவ அதிகாரிகள் குழுவின் வருகை இருநாட்டு உறவை வலுப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது’ என்றார்.
அதற்கு, “சீனாவுடனான உறவுக்கு இந்தியா அதிகபட்ச முன்னுரிமை அளித்துள்ளதோடு, இருநாட்டுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவும் உறுதி பூண்டுள்ளது’ என்று விக்ரம் சிங் பதில் அளித்தார்.