இலங்கைக்கு இவ்வாண்டின் 950,000வது சுற்றுலாப் பயணி பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் காலை 8.25மணிக்கு வந்தடைத்ததாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது.
நாட்டில் வளர்ந்து வரும் சுற்றுலாத்துறைக்கு இதுவொரு மைல்கல் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று போலந்து நாட்டிலிருந்து இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளாக வருகை தந்த ரஸ்ய தம்பதியினரே 950,000ஆவது சுற்றுலாப் பயணிகளாகும்.
இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்பாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை வெளியிட்டுள்ள அண்மைய விபரங்களில், கடந்த ஒக்டோபர் மாதத்தில் மொத்தமாக 80, 379 சுற்றுலாப்பயணிகள் இலங்கையை வந்தடைந்திருந்தனர்.
2011ஆம் ஆண்டுக்கான சுற்றுலாப் பயணிகள் இலக்கான 800,000 கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் 19ஆம் திகதி இலங்கை எட்டியிருந்தது.
இதேவேளை, 2016ம் ஆண்டளவில் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2.6 மில்லியனாக இருக்க வேண்டுமென எதிர்பார்ப்பதாகவும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது