siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 18 டிசம்பர், 2012

ஜப்பான் புதிய பிரதமரின் அறிவிப்பால் சீனா அதிர்ச்சி.


தீவுப் பிரச்னையில் சீனாவுடன் சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்றும், அது ஜப்பானின் ஒருங்கிணைந்த பகுதி என்றும் அந்நாட்டின் அடுத்த பிரதமராக பொறுப்பேற்க உள்ள ஷின்சோ அபே தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் சுதந்திர ஜனநாயகக் கட்சி (எல்டிபி) தலைமையிலான கூட்டணி 300க்கும் மேற்பட்ட இடங்களில் அமோக வெற்றி பெற்றுள்ளது.
இதையடுத்து, அக்கட்சியின் தலைவர் ஷின்சோ அபே அடுத்த பிரதமராக பொறுப்பேற்க உள்ளார். அபேவுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டதுடன், புதிய அரசுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
ஆளும் ஜப்பான் ஜனநாயகக் கட்சி படுதோல்வி அடைந்ததையடுத்து, இப்போதைய பிரதமர் யோஷிஹிகோ நோடா பதவி விலக உள்ளார். தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, அடுத்த பிரதமராக பொறுப்பேற்க உள்ள அபே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பொருளாதாரத்தை வலுப்படுத்த நடவடிக்கை எடுப்பதுடன், சீனாவுடனான சர்ச்சைக்குரிய தீவு பிரச்னையில் கடுமையான நடவடிக்கை எடுக்கப் போவதாக அவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறியது:
தேர்தலில் எங்கள் கட்சி வெற்றி பெற்றதற்கு, மக்களுக்கு மீண்டும் எங்கள் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக அர்த்தம் இல்லை.
மாறாக, ஜனநாயகக் கட்சியின் தவறான கொள்கைகளால் கடந்த மூன்று ஆண்டுகளாக நீடித்து வரும் அரசியல் மந்த நிலைக்கும் குழப்பத்துக்கும் முடிவு கட்ட வேண்டும் என மக்கள் தீர்மானித்துள்ளனர்.
எங்கள் கட்சித் தலைமையில் புதிதாக பொறுப்பேற்க உள்ள அரசுக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார வல்லரசு நாடான ஜப்பானின் பொருளாதாரம் சர்வதேச நிதிநெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள முன்னுரிமை அளிக்கப்படும். "யென்' மதிப்பு வீழ்ச்சியைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்காகு தீவுக் கூட்டங்கள் (டியாவூஸ் என சீனா அழைக்கிறது) ஜப்பான் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி.
சர்வதேச சட்டப்படி இந்தத் தீவுக் கூட்டங்களை ஜப்பான் சொந்தம் கொண்டாடுவதுடன், தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. எனவே, இதுதொடர்பாக மற்ற நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அவசியம் இல்லை. தேசிய நலனை கருத்தில் கொண்டு ஜப்பான் மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் நல்லுறவை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். இதுவிஷயத்தில் சீனா சற்று பின்தங்கி உள்ளது. எனவே, இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து அந்த நாடு சிந்திக்க வேண்டும் என்றார் அபே.
ஜப்பான் தேர்தலில் எல்டிபி வெற்றி பெற்றுள்ள நிலையில், அந்த நாட்டுடனான உறவை மேம்படுத்தத் தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. அதேநேரம், அபே அடுத்த பிரதமராக பொறுப்பேற்க உள்ள நிலையில், சீனா தனது அச்சத்தையும் வெளிப்படுத்தி உள்ளது.
""ஜப்பான் உடனான இப்போதைய எல்லைப் பிரச்னையை முறையாகக் கையாள வேண்டும். இதுவிஷயத்தில் அந்த நாடு எத்தகைய முடிவை எடுக்கும் என்பது கவலை அளிப்பதாக உள்ளது'' என சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங் தெரிவித்தார்.
கிழக்கு சீன கடல் பகுதியில் உள்ள தீவுக் கூட்டங்களுக்கு சீனாவும் ஜப்பானும் சொந்தம் கொண்டாடி வருகின்றன. இதனால் இரு நாடுகளுக்கிடையிலான மோதல் வலுத்து வருகிறது. இரு நாடுகளும் தங்கள் கடற்படையை அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடுத்தி உள்ளன.
சீனாவுடனான பதற்றம் அதிகரித்ததற்கும், அமெரிக்காவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டதற்கும் ஜப்பான் ஜனநாயகக் கட்சியின் தவறான கொள்கைகளே காரணம் என அபே குற்றம் சாட்டி உள்ளார். அதேநேரம், அமெரிக்காவுடனான உறவை புதுப்பிக்க முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
எல்டிபி தலைமையிலான அரசு 50 ஆண்டுகளுக்கும் மேல் தொடர்ந்து ஆட்சியில் இருந்தது. கடந்த 2009-ல் நடைபெற்ற தேர்தலில் தோல்வியடைந்தது. 3 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது. அபே இதற்கு முன்பு 2006-2007-ல் பிரதமராக இருந்தார். உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து பதவி விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது

0 comments:

கருத்துரையிடுக