siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014

பேச்சுவார்த்தையிலிருந்து இம்ரான் விலகல்

 பாகிஸ்தானில் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் பதவி விலக வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான் கான், அப்போராட்டத்தைக் கைவிடுவது குறித்து அரசுடன் நிகழ்த்தி வந்த பேச்சுவார்த்தையிலிருந்து வியாழக்கிழமை விலகினார்.
அந்நாட்டின் மத குரு தாஹிருல் காத்ரியின் அவாமி தெஹ்ரிக் கட்சியும், தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியும் கடந்த ஒரு வாரத்துக்கும் மேல் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இதுகுறித்து விவாதிக்க அரசு விடுத்திருந்த அழைப்பை ஏற்று, இம்ரான் பேச்சுவார்த்தையில் பங்கேற்றார்.
இந்நிலையில் தற்போது அதிலிருந்து விலகியதுடன், இறுதிவரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளதன்மூலம், அரசுக்கு எதிரான தனது நிலையை அவர் மேலும் கடுமையாக்கியுள்ளார்.
உச்ச நீதிமன்றம் உத்தரவு: முன்னதாக, போராட்டக்காரர்களை அப்புறப்படுத்துமாறு உத்தரவிட அந்நாட்டு உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.
போராட்டக்காரர்களுக்கு எதிராக அரசு தலைமை வழக்குரைஞர் சல்மான் பட் தாக்கல் செய்திருந்த மனுவை பரிசீலித்த நீதிபதிகள், “இது நிர்வாகம் சார்ந்த பிரச்னை. அரசுதான் சட்டத்துக்கு உள்பட்டு இந்த விவகாரத்தைக் கையாள வேண்டும்’ என்று தெரிவித்தது.
இதன் காரணமாகவே, இம்ரான் கான் தனது போராட்டத்தைத் தீவிரப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் தீர்மானம்: இதற்கிடையே, பிரதமரை பதவி விலக
வலியுறுத்தி இம்ரான் கான், தாஹிருல் காத்ரி கட்சிகள் மேற்கொண்டுள்ள போராட்டத்துக்கு எதிராக பாகிஸ்தான் நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியது.
எதிர்க்கட்சியினர் தரக்குறைவாகவும், அவதூறாகவும், வன்முறையைத் தூண்டும் வகையிலும் பேசி வருவதைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதிபருடன் ஷெரீஃப் சந்திப்பு: இந்நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்தும், நிலைமையை சமாளிக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளிக்க அதிபர் மம்நூன் ஹுசைனை நவாஸ் ஷெரீஃப் சந்தித்தார்.
முக்கிய அரசுக் கட்டடங்கள் அமைந்துள்ள சிறப்புப் பாதுகாப்பு மண்டலத்துக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்துள்ளதால் ஏற்பட்டுள்ள நிலை குறித்து அதிபரிடன் அவர் எடுத்துரைத்தார்.
 
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

 

0 comments:

கருத்துரையிடுக