siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 20 ஆகஸ்ட், 2012

அட்டகத்தி திரைவிமர்சனம்

20.08.2012.
மீண்டும் ஒரு காதல் கதை. ஆனால் கிராமமும் இல்லை, நகரமும் இல்லை. இது கொஞ்சம் புதுமைதான். சென்னை புறநகர்தான் படத்தின் களம்.
படத்தின் கதாநாயகன் அட்டக்கத்தி தினேஷ். பிளஸ் 2 ஆங்கிலத்தில் மறுபடி மறுபடி பெயிலாகி டுட்டோரியல் காலேஜில் படிக்கிறார்.
எப்படியாவது தனக்கொரு காதலி வேண்டும் என்று பார்க்கிற பெண்களுக்கு எல்லாம் ‘ரூட்’ விடுகிறார். அதில் கதாநாயகியும் அடக்கம்.
கதாநாயகி நந்திதாவிடம் காதலை சொல்லப் போகிற நேரத்தில் அவர் அண்ணா என்று சொல்லி விடுகிறார். திரும்பவும் முயற்சித்து பக்கத்து வீட்டு பெண்ணுக்கு காதல் அம்பு வீசி அங்கேயும் அவருக்கு “பல்ப்”.
இப்படி ஒவ்வொரு பெண்ணிடமும் தோல்வியை சந்திக்கும் தினேஷ், அவன் படிக்கும் காலேஜில் முன்பு அவனை அண்ணா என்று சொன்ன நந்திதாவும் சேர்கிறாள்.
அதன்பிறகு ஏற்படும் சந்தர்ப்பங்களில் நந்திதா தன்னை விரும்புகிறாளோ என்ற எண்ணம் தினேஷூக்கு ஏற்பட மறுபடியும் நந்திதா மீது காதல்.
இந்த காதல் கைகூடியதா? இல்லை ஒவ்வொரு பெண்ணாக கடந்ததா? என்பது மீதிக்கதை.
படத்தில் பிரேம் பை பிரேம் கலக்குவது கதாநாயகன் தினேஷ்தான். முதல் காதலில் தோல்வியடைந்ததும் சோகத்தை வரவழைக்க முயற்சித்து பார்ப்பது, லவ் லெட்டர் கொடுக்கப் போகும் நேரத்தில் முகத்தில் எந்த கலவரத்தையும் காட்டாமல் நதியாவா, திவ்யாவா என ‘சாய்ஸ்’ வைப்பது, ஒரு பெண்ணிடம் லவ் லெட்டர் கொடுக்க வந்து அடிவாங்கும் போது, என்ன அடி... இந்த பக்கமே வரக்கூடாது என புலம்புவது என ஒவ்வொரு காட்சியிலும் முகபாவங்களை அருமையாக காட்டியிருக்கிறார்.
வருகிற பெண்களில் ஸ்வேதாவுக்கே நடிக்க நிறைய வாய்ப்பு. அதை அவர் அழகாகவும் செய்திருக்கிறார். கிராமம், நகரம் கலந்த நடுத்தர குடும்பத்து முகம்.
படத்தில் அட்டக்கத்திக்கு அடுத்து கலக்குவது தினேஷின் அப்பா. இவரு பெரிய அட்டக்கத்தி. தினம் இரவு தண்ணி போட்டுட்டு வீர வசனம் பேசுவது, அடுத்த இரவு காட்சி வரும் முன்னே நமக்கு சிரிப்பை வரவழைத்து விடுகிறது.
சென்னையில் புறநகர் பகுதி குப்பைமேடுகளைகூட ரசிக்கும் படியாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரமோத் வர்மா. பஸ்ஸில் புட்போர்டு அடிக்கும் காட்சிகளை படம் பிடித்த கோணங்கள் ஒவ்வொன்றும் ரசிக்க வைப்பவை.
படத்திற்கு இன்னொரு பலம் சந்தோஷின் இசை. ‘ஆடி போனா ஆவணி’ பாடல் ஆட வைக்கும் ரகத்தில் கலக்கல் என்றால் ‘ஆசை ஒரு புல்வெளி’ நொடியில் மனதில் நிற்கும் மெலோடி. பின்னணி இசையையும் அளவோடு, அழகாக பதிவு செய்திருக்கிறார்.
முதல் படத்திலேயே ஹீரோவுக்குனு இருக்கிற டெம்பிளேட்டுகளை உடைத்து படமாக்கியதற்காக இயக்குனர் ரஞ்சித்தை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.
காதலைச் சொல்லப்போகும் நேரத்தில் மற்றொரு பெண்ணைப் பார்த்து நிலை தடுமாறுவது, பின் யோசிப்பது என்பது மாதிரியான சராசரி மனித இயல்புகளை கதாபாத்திரமாக்கி முழு படத்தையும் இயக்கியிருப்பது, அதற்கு கச்சிதமான திரைக்கதையமைத்திருப்பது பாராட்டப்பட வேண்டியது.
நடிகர்: தினேஷ்.
நடிகை: நந்திதா.
இயக்குனர்: ரஞ்சித்.
இசை: சந்தோஷ் நாராயணன்.
ஒளிப்பதிவு: பி.கே.வர்மா.