07.11.2012.By.Rajah.. கண்முன்னே நிகழ்ந்து கொண்டிருக்கும் கொடுமைகளைக் கண்டு, சாதாரண மனிதர்களுக்கே கோபம் வருவது இயல்பு. அப்படியிருக் கையில், நீதி தேவதை மட்டும் எத்தனை நாள்களுக்குத்தான் உறங்குவது போன்று நடிக்க முடியும்?
ஆனாலும் நீதி தேவதையின் விழிப்பு அதிகாரத்துக்கு பிடித்தமான ஒன்றல்ல.
அதிகாரத்தால் திரையிடப்பட்டு, நடந்தேறும் தில்லு முல்லுகளை நீதி தேவதையின் விழிப்பு வெளிச்சம் போட்டுக் காட்டிவிடும். ஆகவே கும்பகர் ணனைப்போல் எப்போதும் நீதியின் துயில் கொள்ளலையே ஆட்சியாளர்கள் விரும்பினர்
ஆயினும், தன்னைச் சூழ நடக் கும் அநியாயங்களின் உக்கிரம் தாங்கமுடியாமல் நீதிதேவதை யால் நிம்மதியாக உறங்க முடிய வில்லை. அதிகாரம் தன்னுடைய பொம்மை என்று இது நாள்வரை நினைத்திருந்த நீதி தேவதை மீள் உயிர் பெற்றாள்
அரியணை வாசிகளின் அக் கிரமங்கள் ஒவ்வொன்றாக வெளிப் படுத்தப்பட்டு, அவர்களின் ஒவ்வொரு நகர்தலும் கேள்விக் கணைகளால் முற்றுகைக்கு உள்ளாகின. தவறு செய்தவர்களுக்கு விழி பிதுங்கியது. அவர்களின் தயவில் ஒட்டிக்கொண் டிருந்தவர்களுக்கு பேதி குடிக்காமலே வயிறு கலங்கியது.
இனியும் விட்டு வைத்தால், தமது இருப்பு கேள்விக் குறியாகி விடும் என்பது அதிகாரத்துக்குப் புரிந்திருந்தது. தான் ஊட்டி வளர்த்த கடா மார்பில் பாய்ந்த பின்னர், வாளாவிருக்குமா ஆட் சித்தரப்பு? தொடங்கியது கண்ணுக்குத் தெரியாத போர். நீதியும் இந்தப் போரை எதிர்கொள்ள தயாராகவே இருந்தது. தமக்காகப் போராடும் நீதியின் பின்னால் மக்களின் ஆதரவு நிழல் பெரிதாகத் தொடங்கிற்று.
புறக்கணிப்புகள், சலுகைக் குறைப்புகள், திட்டமிட்ட பழிச்சொற்கள், அமைச்சர்களின் இடைவிடாத அறிக்கைகள் என்பவற்றை அதிகாரம் கைவலிக் கும்வரை பிரயோகித்துக் கொண்டே இருந்தது. எதற்கும் நீதி வளைந்து கொடுப்பதாக இல்லை. நீதியோடு, சீண்டி விட்டு சும்மா இருக்கவும் முடியாது. இருந்தால் நீதிதன் கைவரிசையை காட்டிவிடும்.
சாம, தான, பேத வழிக ளெல்லாம் நீதியின் முன்பயனற்றுப் போய்விட தண்ட வழியைக் கையிலெடுத்தனர் அதிகாராத்தின் அடிவருடிகள். நீதிச்சேவை ஆணைக் குழுவின் செயலாளர் மஞ்சுள திலகரட்ண சென்று கொண்டிருந்த வாகனத்தை கம்பிகள், பொல்லுகள் என்பவற்றை கைகளி லேந்திய கும்பல் சூழ்ந்து கொண்டது.
உயிர் தப்பியதே பெரிய காரியம் என்று எண்ணும் அளவுக்கு நிகழ்ந்தது தாக்குதல். மஞ்சுள அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அதிகாரத்தின் அடுத்த குறிபிரதம நீதியரசர்தான். அவரை வீழ்த்த காய்கள் வேக வேகமாக நகர்த்தப்பட்டன.
இந்தச் சதுரங்க ஆட்டத்தில் தன் பக்கத்தில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் அனுசரணையோடு, பிரதம நீதியரசருக்கு எதிராக பிரேரணையை அரசு கொண்டு வந்துள்ளது. நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும் பான் மையோடு இந்தப் பிரரேணை நிறைவேற்றப்பட்டால், பிரதம நீதியரசர் ஷிராணி பண்டார நாயக் காவை வீட்டுக்கு அனுப்ப முடியும் என்று அரசு எண்ணுகிறது.
ஆயினும் இதற்குப் பதிலடியாக சட்டத்தரணிகள் சங்கம், "திட்ட மிட்டே பிரதம நீதியரசர் மீது வீண் பழி சுமத்தப்பட்டு, இந்தப் பிரேரணை கொண்டு வரப்பட்டுள்ளது'' என்பதை மக்களிடம் சொல்லி, போராடுவதற்கான ஆயத்தங்களில் இறங்கி விட்டது.
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவை அந்தப் பதவியில் விருப்பப்பட்டு அமர்த்தியவரே ஜனாதிபதிதான். ஆனால் அதிகாரம் நினைத்த திசையில் நீதியின் தராசை வளைக்க ஷிராணி இடங்கொடுக்கவில்லை.
இதற்கு முன்னரும் தனக்குச் சார்பாக நீதியை வளைக்க ஜனாதிபதி முயற்சியை மேற் கொண்டிருந்தார் என்று முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா குற்றம்சாட்டியுள்ளார்.
"மஹிந்தவுக்குச் சார்பாக தீர்ப்பை நான் ஒரு வழக்கில் வழங்கியதால் தான் இன்று அவர் ஜனாதிபதியாக முடி சூடிக்கொள்ள முடிந்தது'' என்று எந்த வெட்கமும் இல்லாமல் நீதியை மஹிந்தவுக்காக அடகு வைத்த கதையை சரத் என் சில்வா போட்டு உடைத்திருக்கிறார். ஆனால், ஷிராணி அப்படியல்ல, அவர் சரத் என் சில்வாவைப்போல சுடலை ஞானம் வந்து தத்துவம் பேசாமல், நிகழ்கணத்திலேயே தன் கைகளில் கறை படியாமல் பார்த்துக் கொள்ளவே விரும்பினார்.
அதற்குப் பரிசே அவரது பதவியைப் பறிக்கும் முயற்சி களும், அதன் விளைவாக வந்துள்ள பிரேரணைகளும். அறம் பிழைத்த நாட்டில் அறமே கூற்றாக மாறும். இதற்கு புராணங்கள் முதல் கிட்டியகாலம் வரை நிறைய உதாரணங்கள் உண்டு. தனக்கு எதிராக கருத்துத் தெரிவித்தமைக்காக உயர் நீதிமன்ற நீதிபதியின் பதவியைப் பறித்த மாலைதீவு ஜனாதிபதி, தன்னுடைய கதிரையைப் பறிகொடுக்க வேண்டியிருந்தது
அதேபோன்று பாகிஸ்தான் ஜனாதிபதியும் உயர் நீதிமன்றத்தோடு, முரண்டு பிடித்ததால் தன்னுடைய பதவிக்கு எப்போது முற்றுப்புள்ளி விழப்போகிறதோ என்று நிம்மதியின்றி ஏங்கிக்கொண்டிருக்கிறார். தன்னுடைய மிக நெருக்கமான நட்பு நாடுகளான மாலைதீவு, பாகிஸ்தான் போன்றவற்றின் ஜனாதிபதிகள் செய்த தவறையும் அதனால் எழுந்த விளைவையும் கண்முன் கண்ட பின்னும் நீதித்துறையோடு சண்டித்தனம் செய்வதிலேயே குறியாக இருக்கின்றனர் இலங்கையின் ஆட்சியாளர்கள்.
யார் கண்டது, கெடுகாலம் வந்துவிட்டால் கண்ணும் அறிவும் கெட்டுவிடுமாம். கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதால் எதுவும் நடக்கப்போவதில்லை.
நீதி தேவதையே தனக்கு நீதிகோரி புலம்பி அழுவது இலங்கைத் திருமணி நாட்டில் மட்டுமே நிகழும் அதிசயம். நடப்பதை எல்லாம் கைகட்டிக்கொண்டு, பார்ப்பது மட்டுமே எம்மால் முடிந்த காரியம்
0 comments:
கருத்துரையிடுக