அட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட வெலிஓயா புதுக்காடு இலக்கம் இரண்டு பாடசாலையில் அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தினால் இந்தப்பாடசாலையில் கல்விகற்கின்ற மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
அட்டன் - வட்டவளை பிரதான பாதையில் செனன் தோட்டத்துக்கு அருகிலிருந்து 4 கிலோ மீற்றர் தூரமுள்ள இந்தப் பாடசாலையில் தரம் ஐந்து வரை வகுப்புக்களை உள்ளதோடு 80 மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.
சீடா திட்டத்தின் மூலம் கட்டிட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ள போதும் உரிய பராமரிப்புக்கள் இடம் பெறாத காரணத்தினால் இந்தப்பாடசாலை நாளுக்கு நாள் பாழடைந்து வரும் நிலையை அடைந்துள்ளது.
வகுப்பறை கட்டிடங்களிலுள்ள கதவுகள், சாளரங்கள், தரை என்பன சேதத்துக்கு உள்ளாகியுள்ளன. ஆசிரியர் விடுதிகள் பாழடைந்துள்ளன. மலசலக்கூடங்களின் கதவுகள் அகற்றப்பட்டுள்ளன. குடிநீர் வசதிகள் இல்லை. மிகுந்த சிரமங்களுக்கு மத்தியிலேயே இந்தப்பாடசாலையின் மாணவர்கள் கல்விக் கற்று வருவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
மக்கள் பிரதிநிதிகள் இந்தப்பாடசாலையில் பல்வேறு கூட்டங்களில் கலந்து கொண்டு பல வாக்குறுதிகளை வழங்கி சென்ற போதும் இதுவரை எந்த உதவிகளும் கிடைக்கவில்லையென பெற்றோர் கூறுகின்றனர். இந்தப்பாடசாலையில் தற்போது கடமையாற்றும் அதிபர் வருகை தந்து குறுகிய காலமென்பதால் இந்தப்பாடசாலையைச் சிறந்த சுற்றாடல் உள்ள பாடசாலையாக மாற்றிக்காட்டப்போவதாக கருத்துத் தெரிவித்தார்.
இந்த நிலையில் தோட்டக்குடியிருப்புக்கு அருகிலுள்ள இந்தப்பாடசாலையை முன்னேற்றுவதற்கு பெற்றோரின் அக்கறையும் தேவையென சுட்டிக்காட்டப்படுகின்றது. இதே வேளை அட்டன் கல்வி வலய அதிகாரிகள் இந்தப்பாடசாலைக்கு விஜயம் செய்து உரிய பரிகாரங்களை மேற்கொள்வது இன்றியமையாததாகும்
புதன், 16 ஜனவரி, 2013
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக