பாகிஸ்தானிலுள்ள பஞ்சாப் மாகாண தலைநகரான லாகூரில் இருந்து பி,கே709 என்ற பாகிஸ்தான் சர்வதேச விமானம் நேற்று காலை 9.35 மணிக்கு பிரிட்டன் மான்செஸ்டர் நகர் நோக்கி புறப்பட்டு சென்றது.
பிரிட்டன் நேரப்படி மதியம் 2 மணிக்கு மான்செஸ்டர் செல்ல வேண்டிய அந்த விமானத்தில் 297 பயணிகள் இருந்தனர். மான்செஸ்டர் நகரை நெருங்கிக் கொண்டிருந்த வேளையில், அந்த விமானத்தில் தீவிரவாதிகள் இருப்பதாக வந்த செய்தியை அடுத்து பிரிட்டன் போர் விமானங்கள் பாகிஸ்தான் விமானத்தை இடைமறித்தன.
பின்னர் மான்செஸ்டர் விமான நிலையத்தில் இறக்குவதற்கு பதில் ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட அந்த விமானம் அங்கு தரையிறக்கம் செய்யப்பட்டது. உடனடியாக அங்கு தயாராக இருந்த பொலிசார் அதிரடியாக பாகிஸ்தான் விமானத்திற்குள் புகுந்து சோதனையிட்டனர்.
பின்னர் சந்தேகத்தின் பேரில் 30 மற்றும் 41 வயது மதிக்கத்தக்க இருவரைக் கைது செய்தனர். பிரிட்டனை சேர்ந்த அவர்கள் இருவரும் குற்றவாளிகளா? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருந்தும் அவர்களிடமிருந்து எந்தவித ஆயுதங்களும் கைப்பற்றப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமானத்தில் அச்சுறுத்தல்கள் இருப்பதாக வந்த தகவலை அடுத்து விமானத்தை ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தில் விமானத்தை இறக்கியிருப்பதாக விமானி தெரிவித்ததாக பயணிகள் தெரிவித்தனர்.
ஆனால், விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் பத்திரமாக இருப்பதாக பாகிஸ்தானிய விமான நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து வந்த இரு விமானங்கள் இது போன்று சோதனைக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது
0 comments:
கருத்துரையிடுக