நாசா விண்வெளி மையத்திலிருந்து ஆறு விண்வெளிவீரர்கள் விண்ணிற்கு செலுத்தப்பட்டுள்ளனர்.
அதில் லுகா பர்மிடானோ என்ற இத்தாலி வீரர் விண்ணில் நடக்க இருக்கும் முதல் இத்தாலியர் என்ற பெருமையுடன் கிறிஸ்டோபர் காசிடி என்ற மற்றொரு வீரருடன் இன்று விண்வெளியில் நடக்க ஆரம்பித்தார்.
விண்வெளியில் நடத்தப்பட வேண்டிய வழக்கமான பராமரிப்பு பணியுடன், கேபிள் இணைப்பு போன்ற பணியையும் செய்வதற்காக அவர்கள் ஆறு மணி நேரம் விண்வெளியில் இருப்பதாக இருந்தது. ஆனால், ஒரு மணி நேரத்திற்கெல்லாம் பர்மிடானோ தனது பின்னந்தலையில் நிறைய தண்ணீர் இருப்பதுபோல் உணருவதாக சொன்னதும் கண்காணித்துக் கொண்டிருந்த அனைவரும் திடுக்கிட்டனர்.
முதலில், அதனை வியர்வை என்று அவர் நினைத்தார். தண்ணீர் குடிப்பதற்காக ஹெல்மெட்டில் பொருத்தப்பட்டிருந்த தண்ணீர்ப் பையிலிருந்து கசிவு ஏற்பட்டிருக்கலாம் என்று அவரது சக வீரர் காசிடி தெரிவித்தார். ஆனால், சிறிது நேரத்திற்கெல்லாம் அந்தத் தண்ணீர் அவரது கண்ணில் நிறைய ஆரம்பித்தது.
இதனால் நாசா மையம் இருவரையும் விண்வெளி மையத்திற்கு திரும்ப அழைத்தது. அதற்குள் அவரது மூக்கு,வாய் போன்ற இடங்களிலும் நீர் சேர ஆரம்பித்து அவரால் நாசாவின் அறிவிப்பைக் கூட கேட்க இயலவில்லை. பர்மிடானோ திரும்புவதற்கு உதவிய காசிடி, உடனடியாக தாங்கள் நின்றிருந்த பகுதியை சுத்தம் செய்த பின்னர் மீண்டும் விண்வெளி மையத்திற்குள் நுழைந்தார்.
அங்கிருந்த மீதி நால்வரும் பர்மிடானோவின் ஹெல்மெட்டைக் கழற்றி அவரது தலையைத் துவட்ட உதவினர். நாசாவின் தொலைக்காட்சியில் தோன்றிய பர்மிடானோ அனைவரையும் நோக்கி உற்சாகத்துடன் கையசைத்தார்.
இந்த நீர்க்கசிவு எதனால் ஏற்பட்டது என்று ஆராயப்பட்டு வருகின்றது. கடந்த 2004-ம் ஆண்டு, ரஷ்ய வீரர்களும், அமெரிக்க வீரர்களும் விண்வெளியில் நடந்தபோது, அவர்கள் அணிந்திருந்த உடையில் ஏற்பட்ட பிரச்சினையினால் 14 நிமிடத்திற்கெல்லாம் திரும்ப அழைக்கப்பட்டனர். இப்போது இவர்களின் விண்வெளி நடை ஒரு மணி 32 நிமிடம் நீடித்தது
0 comments:
கருத்துரையிடுக