siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 2 ஜூலை, 2013

யாழில் சட்டவிரோத மணல் அகழ்வில் படையினர்!


வலி.கிழக்கின் அக்கரை கிராம கடற்கரையோரங்களில் படையினர் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டு வருகின்றனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு என்ற அடிப்படையில் படையினர் என்னத்தையும் கொண்டு போகலாம் என்ற நிலையினை ஏற்றுக் கொள்ள முடியாது சட்டவிரோத மணல் அகழ்வினை காவல்துறையினரும் கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர்.இப்பகுதி நீண்ட காலமாக படை கட்டுப்பாட்டில் இருந்தது. இப்போது மீள்குடியேற்றத்திற்காக அந்த பகுதியில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சில பகுதிகளில் மிதிவெடி உள்ளதாக மக்கள் அச்சங் கொண்டிருந்ததால் முழுமையாக அப்பகுதியை கண்ணிவெடியகற்றித் தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்ததோடு அயல் கிராமங்களிலும் தற்காலிகமாகத் தங்கியுள்ளனர்.பொது மக்களது உழவு இயந்திரங்களைப் பாவித்து படையினர் மணல் அகழ்ந்து கொண்டு செல்கின்றனர்.
மணல் அள்ளப்படுவதற்குரிய எந்த அனுமதிகளும் உரியவாறு எடுக்கப்படவில்லை. கடற்கரையிலுள்ள இந்த மணலானது அகழ்ந்து எடுக்கப்படுவதானது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும். இதனைப் பொது மக்கள் கேட்டபோது பிரிகேடியரிடம் கேளுங்கள் அல்லது இராணுவத் தலைமையத்திடம் கேளுங்கள் என்ற பதில்கள் சொல்லப்படுகின்றது.
படையினர் தமக்கான புதிய முகாம்கள் அமைப்பதற்கும் புதிய பல விடயங்களைச் செய்வதற்கும் இந்த மணலைப் பாவிக்கின்றனர். படையினர் அடிக்கும் மணல் கொள்ளைக்கு இணையாக உழவு இயந்திரங்களை படையினருக்க வழங்குபவர்களும் கொள்ளை அடிக்கின்றனர்.அகழ்ந்த மணலை இராணுவம் கொண்டு செல்கின்றது என்று காவல்துறையினரும் கண்டு கொள்வதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்

0 comments:

கருத்துரையிடுக