பாகிஸ்தானில் அடுத்த மாதம் 23–ந் தேதி நடக்கவுள்ள முப்படை அணிவகுப்பில் சீன அதிபர் ஜின் பிங்கை சிறப்பு விருந்தினராக அழைக்க நவாஸ் ஷெரீப் அரசு அதிரடி முடிவு எடுத்துள்ளது.
ஒபாமா, சிறப்பு விருந்தினர்
இந்தியாவில் 66–வது குடியரசு தினம், கடந்த மாதம் 26–ந் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி தலைநகர் டெல்லியில் நடந்த கொண்டாட்டங்களில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அமெரிக்க ஜனாதிபதி ஒருவர், இந்திய குடியரசு தின கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றது இதுவே முதல் முறை ஆகும்.
இது பாகிஸ்தானுக்கு அதிர்ச்சியை அளித்தது. அங்குள்ள பஞ்சாப் மாகாணத்தின் கவர்னர் சவுத்ரி முகமது சர்வார், ‘‘அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இந்தியாவுக்கு குடியரசு தினவிழா சிறப்பு விருந்தினராக வந்ததும், முக்கியத்துவம் வாய்ந்த சிவில் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதும், பாகிஸ்தானுக்கு ராஜ்யரீதியிலான தோல்வியாக அமைந்து விட்டது’’ என விமர்சித்தார்.
அதிரடி முடிவு
இந்த நிலையில், பாகிஸ்தானில் அடுத்த மாதம், 23–ந் தேதி குடியரசு தின விழா, பாகிஸ்தான் தினம் என்ற பெயரில் கொண்டாடப்பட உள்ளது. அங்கு குடியரசு தின விழாவின்போது, முப்படை அணிவகுப்பு நடத்துவது வழக்கம். ஆனால் சமீப காலமாக பாதுகாப்பு காரணங்களை கூறி, முப்படை அணிவகுப்பு நடத்துவதில்லை. கடைசியாக கடந்த 2008–ம் ஆண்டு முஷரப் ஆட்சிக்காலத்தில்தான் முப்படை அணிவகுப்பு நடைபெற்றது.
இப்போது, 6 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் இந்த ஆண்டு குடியரசு தின விழாவையொட்டி ராவல்பிண்டி நகரில் முப்படை அணிவகுப்பு நடத்தவும், அதற்கு சீன அதிபர் ஜின்பிங்கை தலைமை விருந்தினராக அழைக்கவும் நவாஸ் ஷெரீப் அரசு அதிரடியாக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ராணுவ வட்டார தகவல்
இது தொடர்பாக மூத்த ராணுவ அதிகாரி ஒருவர், ‘‘மார்ச் 23–ந் தேதி முப்படை அணிவகுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என கூறியதாக ‘டான் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
அதே நாளேடு, இந்த அணிவகுப்புக்கு சீன அதிபர் ஜின் பிங்கை சிறப்பு விருந்தினராக அழைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ராஜ்ய ரீதியிலான தகவலை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டு இருக்கிறது.
இந்த முப்படை அணிவகுப்பு,
ராவல்பிண்டியில் உள்ள ராணுவ தலைமையகத்தின் ஏற்பாட்டில் நடக்கிறது. எந்த இடத்தில் அணிவகுப்பை நடத்துவது என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
இந்த முப்படை அணிவகுப்பு, பாகிஸ்தானின் முப்படை பலத்தை பறைசாற்றுவதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கலாசார நிகழ்ச்சிகளும் இந்த அணிவகுப்பின்போது இடம் பெறும் என தகவல்கள் கூறுகின்றன.
0 comments:
கருத்துரையிடுக