siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 27 ஜூன், 2016

மைசூரு மன்னர் வாரிசு யதுவீர்–திரிஷிகா குமாரி திருமணம் இன்று!

மைசூரு மன்னர் வாரிசு யதுவீருக்கும், திரிஷிகா குமாரிக்கும் இன்று மைசூரு அரண்மனையில் திருமணம் நடக்கிறது. இதையொட்டி 40 ஆண்டுகளுக்கு பிறகு மைசூரு அரண்மனை விழாக்கோலம் பூண்டுள்ளது. 
மன்னர் வாரிசு 
உலகப்புகழ் பெற்ற மைசூரு மன்னர் வாரிசாக யதுவீரை, மகாராணி பிரமோதாதேவி தத்தெடுத்தார். இவர் மறைந்த மன்னர் ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையாரின் தங்கை மகன் ஆவார். யதுவீர் மன்னர் வாரிசாக தத்தெடுக்கப்பட்ட பிறகு அவருக்கு, யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையார் என்று பெயர் சூட்டப்பட்டது. அவருக்கு பெயர் சூட்டு விழாவும், பட்டாபிஷேக விழாவும் கோலாகலமாக நடத்தப்பட்டது. அதையடுத்து யதுவீரின் தலைமையில் மைசூரு தசரா விழாவும், 
தர்பாரும் நடந்தன. 
யதுவீர் அமெரிக்காவில் படித்தபோது, அவருடன் படித்த ராஜஸ்தான் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த திரிஷிகா குமாரியுடன் நட்பு ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. அதன் ஒரு படியாக திரிஷிகா குமாரி தனது குடும்பத்தினருடன் யதுவீரின் பட்டாபிஷேக விழாவிலும் கலந்துகொண்டார். 
40 ஆண்டுகளுக்கு பிறகு...
இதையடுத்து யதுவீருக்கும், திரிஷிகா குமாரிக்கும் திருமணம் செய்து வைக்க மகாராணி பிரமோதாதேவி முடிவு செய்தார். அதன்படி இவர்களது திருமணம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிச்சயிக்கப்பட்டது. திருமணம் நிச்சயதார்த்தம் மைசூரு அரண்மனை மன்னர் குடும்ப சம்பிரதாய முறைப்படி நடந்தது. 
அப்போது யதுவீர்–திரிஷிகா குமாரி திருமணம் ஜூன் 27–ந் தேதி(அதாவது இன்று) நடைபெறும் என்று தேதி குறிக்கப்பட்டது. திருமண தேதி குறிக்கப்பட்ட நாள்முதல் மைசூரு அரண்மனை களை கட்டியது. 40 ஆண்டுகளுக்கு பிறகு மைசூரு அரண்மனையில் திருமணம் நடக்க இருப்பதால் மைசூரு நகரமே விழாக்கோலம் பூண்டது. 
சாமுண்டீஸ்வரிக்கு 
சிறப்பு பூஜை  
திருமணத்தையொட்டி நேற்று முன்தினம் மணமக்களுக்கு பாதபூஜை செய்யும் நிகழ்ச்சி நடந்தது. அதையொட்டி குலதெய்வமான சாமுண்டீஸ்வரிக்கு அரண்மனையில் வைத்து யதுவீர் சிறப்பு பூஜை செய்தார். ராஜகுருவான பரகால மடத்தின் மடாதிபதி அபினவா வாகிஷா, மணமக்களுக்கு பாதபூஜை செய்தார். 
நேற்று காலை மணமகன் யதுவீரால் திருமணம் தொடர்பான ஆன்மிக, சம்பிரதாய நிகழ்ச்சிகள் தொடங்கி வைக்கப்பட்டன. பின்னர் சாலிகிராம பூஜையும், அரண்மனைக்குள் உள்ள கண்ணாடி தொட்டியில் வைக்கப்பட்டிருக்கும் விதவிதமான 450 விநாயகர் சிலைகளுக்கு யதுவீர் பூஜையும் செய்து, கணபதி பூஜையை நடத்தினார். பிறகு மணமகனுக்கு சமாவர்தன ஹோமம், சாஸ்திரம், சகுன சாஸ்திரம், கன்னியதான சாஸ்திரம் ஆகிய பூஜைகள் மணமகளின் பெற்றோர்களால் செய்யப்பட்டது. பின்னர் மகாராணி பிரமோதாதேவிக்கு பாதபூஜை செய்யப்பட்டது. 
அரண்மனை வளாகத்தில் ஊர்வலம்
அதையடுத்து மணமகன் யதுவீருக்கு காவி உடை அணிவித்து காசி யாத்திரைக்கு அனுப்புவது போன்று அலங்கரித்து தொப்பி, குடை, புதிய செருப்பு, நவ வஸ்திரம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டன. பின்னர் மணமகன் சம்பிரதாய முறைப்படி காசி யாத்திரை செல்வது போன்று அரண்மனை வளாகத்தில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். இதையொட்டி பிரபல வயலின் இசைக்கலைஞர்கள் மஞ்சுநாத்–நாகராஜ் சகோதரர்களின் கச்சேரி நடந்தது. 
இன்று(திங்கட்கிழமை) காலை 6.30 மணியளவில் நெல், மொச்சைக்கொட்டை ஏற்றிச் செல்லும் ஊர்வலம் அரண்மனையின் மதன விலாச நுழைவு வாயிலில் இருந்து, யானை வாயில் வரை நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு திருமண மண்டபத்தில் உள்ள திருமண சாஸ்திரம் நடத்தும் பலகைக்கு மணமகன் அழைத்து வரப்படுகிறார். அப்போது பல்வேறு பூஜைகள் நடக்கின்றன. 
திரிஷிகா குமாரிக்கு தாலி கட்டுகிறார்
பின்னர் காலை 9.05 மணியில் இருந்து 9.35 மணிக்குள் மணமகன் யதுவீர், மணமகள் திரிஷிகா குமாரிக்கு தாலி கட்டுகிறார். அப்போது தாக்ஷாயினி பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெறுகின்றன. இரவு 7 மணிக்கு மணமக்களின் ஊஞ்சல் நிகழ்ச்சியும், நாளை காலை 9 மணிக்கு பல்வேறு பூஜைகள் மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. திருமணத்திற்கு வருபவர்களுக்கு நாளை மாலை வரை அறுசுவை உணவு வழங்கப்படுகின்றன. பின்னர் இரவு 7.30 மணியளவில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருமண ஏற்பாடுகள் அனைத்தும் கோலாகலமாக செய்யப்பட்டுள்ளன. 
இதில் முதல்–மந்திரி சித்தராமையா உள்பட முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், எம்.எல்.சி.க்கள், நடிகர்–நடிகைகள் பலர் கலந்து கொள்வார்கள் 
என்று கூறப்படுகிறது. 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 comments:

கருத்துரையிடுக