நியூசிலாந்தில் 102 நாட்களுக்கு பின்னர் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்நாட்டு பிரதமர் ஜெசிண்டா ஆர்டர்ன் ஊரடங்கை அமுல்படுத்தியுள்ளார்.உலகையே
உலுக்கி வரும் கொரோனா வைரஸ் பரவலை நியூசிலாந்து சிறப்பாக கட்டுப்படுத்தியிருந்தது. பெப்ரவரி மாதம் அந்நாட்டில் முதல் வைரஸ் தொற்று உறுதி
செய்யப்பட்டது. இதையடுத்து சர்வதேச எல்லைகள் மூடப்பட்டு மார்ச் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது.ஊரடங்கை தீவிரமாக அமல்படுத்தியதன் விளைவாக நியூசிலாந்தில் கொரோனா வைரஸ் பரவல் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டது. நேற்றைய நிலவரப்படி அந்நாட்டில் 1,219 பேருக்கு
கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. அதில் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.ஆனாலும், வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 22 பேர் மட்டுமே
சிகிச்சை பெற்று வந்தனர். எஞ்சியோர் அனைவரும் குணமடைந்தனர்.சிகிச்சை பெற்றுவருபவர்கள் அனைவரும் வெளிநாடுகளில் இருந்து நியூசிலாந்து வந்தவர்கள் ஆவர். அவர்கள் அனைவரும் நாட்டின் எல்லையிலே
தடுத்து நிறுத்தப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதனால், கொரோனா நாட்டுக்குள் பரவும் சங்கிலித்தொடரை தகர்த்துவிட்டதாக அந்நாட்டு பிரதமர் ஜெசிண்டா ஆர்டர்ன் தெரிவித்திருந்தார்.இதையடுத்து கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தியதற்காக உலக நாடுகள் நியூசிலாந்து அரசுக்கு வாழ்த்துக்கள்
தெரிவித்து வந்தன.
இதற்கிடையில், நியூசிலாந்தில் கடந்த 100 நாட்களாக உள்ளூர் மக்கள் யாருக்கும் கொரோனா தொற்று உறுதியாகவில்லை என நேற்று முன்தினம் அந்நாட்டு அரசு அறிவித்திருந்தது.இந்நிலையில், 102 நாட்களுக்கு
பிறகு நியூசிலாந்தில் கொரோனா தொற்று மீண்டும் பரவத்தொடங்கியுள்ளது. அந்நாட்டின் ஒக்லாந்தில் உள்ள ஒரு குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.ஒக்லாந்தில் வசித்துவந்த 50 வயது நிரம்பிய நபர் உடல்நலக்குறைவு காரணமாக
மருத்துவமனையில் பரிசோதனைக்கு சென்றார். அங்கு அவருக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அந்த பரிசோதனையில் 50 வயது நிரம்பிய நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அந்த நபரின் குடும்பத்தினர் 6 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.அதில் மேலும், 3 பேருக்கு கொரோனா பரவியிருப்பது தெரியவந்தது.இதனால், அதிர்ச்சியடைந்த
சுகாதாரத்துறை அதிகாரிகள் வைரஸ் உறுதி செய்யப்பட்ட 4 பேரையும் சிகிச்சைக்காக அனுமதித்தனர். உள்ளூர்வாசிகள் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து ஒக்லாந்து முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக பிரதமர் ஜெசிண்டா ஆர்டர்ன் அறிவித்தார்.நகரம் முழுவதும் 3 ஆம் கட்ட எச்சரிக்கை
அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், நாடு முழுவதும் 2 ஆம் கட்ட எச்சரிக்கை அமுல்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.102 நாட்களுக்கு பின் மீண்டும் கொரோனா பரவத்தொடங்கியுள்ளதால், நியூசிலாந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் வைரஸ் தடுப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு
வருகின்றனர்.
0 comments:
கருத்துரையிடுக